மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கை டிசம்பர் 17 ஆம் திகதி விசாரணைக்காக அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று திகதியிட்டது.
2012 ஆம் ஆண்டு கிரீஸ் அரசாங்கத்தின் பொருளாதார சரிவைக் காரணம் காட்டி, இலங்கை அரசாங்க நிதியை கிரீஸ் பத்திரங்களில் முதலீடு செய்ததன் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு ரூ. 1.8 பில்லியனுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம்சாட்டி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (10) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன் அழைக்கப்பட்ட போது பிரதிவாதிகளும் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
இதன்போது பிரதிவாதி கோரிய பல ஆவணங்களை அரசு தரப்பு இன்னும் வழங்கவில்லை என்று பிரதிவாதியின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
நவம்பர் 3 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த ஆவணங்கள் பிரதிவாதிக்கு வழங்கப்படும் என்று இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதிபதி, வழக்கை டிசம்பர் 14 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு திகதியிட்டார்.
2012 ஆம் ஆண்டில் கிரீஸ் கடுமையான பொருளாதார மந்தநிலையை சந்தித்து வருவதை அறிந்தும், கிரீஸ் அரசாங்க பத்திரங்களில் 1.84 பில்லியன் ரூபாயை முதலீடு செய்ததன் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படுத்தியதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், முன்னாள் பிரதி ஆளுநர் தர்மசேன தீரசிங்க, தொன் வசந்த ஆனந்த சில்வா, சந்திரசிறி ஜயசிங்க பண்டித சிறிவர்தன மற்றும் எம்.ஏ. கருணாரத்ன ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.