உள்நாடுபிராந்தியம்

மண்சரிவு அபாயம் – 70 குடும்பங்களைச் சேர்ந்த 311 பேர் வெளியேற்றம்

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக, மஸ்கெலியா, மறே தோட்டத் தொழிற்சாலை பிரிவைச் சேர்ந்த 70 குடும்பங்களைச் சேர்ந்த 311 பேர் வெளியேற்றப்பட்டு, நல்லதன்னி தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக நல்லதன்னி பொலிஸார் தெரிவித்தனர்.

இம்மக்கள் நேற்று (08.12.2025) திங்கட்கிழமை மாலை மறே தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டு குறித்த பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சிறுவர்கள், பெரியோர்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் எனப் பலரும் உள்ளடங்குகின்றனர். இதேவேளை, மஸ்கெலியா மறே தொழிற்சாலைப் பிரிவுத் தோட்டத்திற்கு அருகிலுள்ள மலையில் காணப்படும் பாரிய கற்பாறையொன்றில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளமையினால், அந்தக் கற்பாறை சரிந்து விழும் அபாயம் காணப்படுவதாக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நேற்றிரவு முதல் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருவதுடன், மக்களின் பாதுகாப்பு கருதி இராணுவத்தினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் குறித்த பகுதிக்குத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் வரவழைக்கப்பட உள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

-சதீஸ்குமார்

Related posts

கொவிட் – 19 விஞ்ஞான ரீதியான முறையில் கட்டுப்படுத்த நடவடிக்கை

பல்கலைக்கழக நடவடிக்கைகள் குறித்து விசேட அறிவிப்பு

தொடர்ந்தும் QR முறைமையின் கீழான பதிவு