உள்நாடுபிராந்தியம்

போதைப் பொருள் வியாபாரி உட்பட நால்வர் வளத்தாப்பிட்டியில் கைது!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரம், புதிய கிராமம் பகுதியில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர்களை இன்று (22) திங்கட்கிழமை அதிகாலை வேளையில் சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினரினால் முற்றுகையிடப்பட்டது.

சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, நீண்ட காலமாக இளைஞர்களை இலக்குவைத்து சூட்சுமமான முறையில் வியாபாரம் செய்துவந்தவரை கைது செய்துள்ளனர்.

வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரம் பகுதியைச் சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் ஒருவரையும், கல்லரிச்சல் 04 பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும், வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரம் புதிய கிராமம் பகுதியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் ஒருவரையும், சம்மாந்துறை 03 பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும் என நால்வர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 2321 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளும், 380 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளும், ஒரு தொகை பணம், கையடக்கத் தொலைபேசி (03), Power bank (03), வங்கி அட்டை (03) என்பன மீட்கப்பட்டிருந்ததுடன், சந்தேக நபர்கள் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் என்பன சட்டநடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் மூவருக்கு நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்படாமல் தலைமறைவாகி இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த கைது நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனைக்கு அமைய, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.நிசாந்த பிரதிப்குமாரவின் வழிகாட்டுதலில், சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என்.றிபாய்டீன் தலைமையிலான குழுவினரினால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-தில்சாத் பர்வீஸ்

Related posts

சபாநாயகருக்கு அர்ச்சுனா கடிதம் – பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்யப்போவதாக எச்சரிக்கை

editor

பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

ரதன தேரரின் செயற்பாட்டினை நினைத்து பௌத்தனாக நான் வெட்கப்படுகிறேன் [VIDEO]