நுவரெலியா, வெளிமடை, பண்டாரவளை மற்றும் கெப்டிபொல பகுதிகளில் ஈஸி கேஸ் முறையைப் பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனை செய்து வந்த காமா அக்கா என்ற 50 வயதான பெண் நுவரெலியா பிராந்திய ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் விற்பனை வலையமைப்பை விசாரித்தபோது, அந்தப் பெண் நுவரெலியா மாவட்டத்தில் பல இடங்களில் வாடிக்கையாளர்களுக்கு ஈஸி கேஷ் மூலம் பணம் பரிமாறி வந்தது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், போதைப்பொருள் வாங்குபவர்களின் தொலைபேசி பதிவுகளை பகுப்பாய்வு செய்தபோது, சந்தேக நபர் ஹங்வெல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருப்பது கண்டறியப்பட்டது.
சந்தேக நபர் நேற்று (06) கைது செய்யப்பட்டு நுவரெலியா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது, போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் ரூ.1,41,000 பணமும் 32 கிராம் ஹெராயினும் கைப்பற்றப்பட்டன.
நுவரெலியா பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளின் கூற்றுப்படி, இவர் நீண்ட காலமாக நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில்இரகசியமாக போதைப்பொருள் விற்பனை செய்து வந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
-கே. கிஷாந்தன்
