அரசியல்உள்நாடு

போதைப்பொருள் கடத்தலைத் தடுத்து நிறுத்துவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் – பிரதமர் ஹரிணி

இந்தியக் கடல் பரப்பில் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கும், போதைப்பொருள் கடத்தலைத் தடுத்து நிறுத்துவதற்கும் அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

“மாற்றமடைந்து வரும் இயக்கவியலின் கீழ் இந்தியக் கடல் பரப்பின் கடல்சார் நோக்கு” என்ற தொனிப்பொருளில் இலங்கை கடற்படையால் 12ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட “காலி கலந்துரையாடல் 2025” சர்வதேச கடல்சார் மாநாட்டில் உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கே மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,

“பல வருடங்களாக, இந்த கலந்துரையாடல் இந்தியக் கடல் பரப்பின் எதிர்காலம் குறித்த விவாதங்களுக்கான சர்வதேச தளமாக இருந்து வருகின்றது.

இந்தியக் கடல் பரப்பானது உலகின் மிகவும் முக்கியமான மூலோபாய நன்மையைக் கொண்ட கடல் பரப்புகளில் ஒன்றாகும். இது வர்த்தகம் மற்றும் வலுசக்திப் பாதுகாப்பிற்கு அத்தியாவசியமான ஒரு பிரதான பாதையாகவும், மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வாதாரமாகவும் இருந்து வருகின்றது.

இருப்பினும், புவிசார் அரசியல் போட்டி, சுற்றுச்சூழல் அழுத்தம், சட்டவிரோத வருகை மற்றும் நிர்வாக சவால்களும் இதனுடன் இணைந்து தலை தூக்கி இருக்கின்றன.

பல நூற்றாண்டுகளாக, வர்த்தகம், கலாசாரப் பரிமாற்றம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கான நாகரிகங்களின் மையமாக இந்தியக் கடல் பரப்பு இருந்து வருகிறது.

இன்று, இது மூலோபாயத் தேவைகளை ஒன்றிணைக்கும் பிரதான தளமாகவும், போட்டிகள் அரங்கேறும் மேடையாகவும், ஒத்துழைப்புக்கான களமாகவும் மாற்றம் பெற்றிருக்கின்றது.

இந்தியக் கடல் பரப்பில் இலங்கையின் அமைவின் முக்கியத்துவத்தையும் அதன் பொறுப்பையும் நாம் நன்கு உணர்ந்திருக்கின்றோம்.

இந்தியக் கடல் பரப்பானது அமைதி, பாதுகாப்பு, நிலையான தன்மை, நீதி மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நிர்வாகிக்கப்படும் ஒரு பிரதேசமாக மாற்றுவதற்கு அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து பணியாற்றுவதே எமது நோக்கமாகும்.

நவீன உலகின் கடல் பரப்பானது முன் ஒருபோதும் இல்லாத சவால்களை எதிர்கொண்டுள்ளது.

காலநிலை மாற்றம், கடல் மட்ட உயர்வு, அதிகப்படியான மீன்பிடித்தல் மற்றும் சுற்றுச்சூழல் மாசடைதல் ஆகியவை உயிரினப்பன்மை, மனிதப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கின்றன.

கடல் சூழலைப் பாதுகாப்பது நமது தேசிய இருப்புக்கு இன்றியமையாததாகும், அதனாலேயே நாம் வலுவான பாதுகாப்பு கட்டமைப்பு, கடல் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு ஆகியவற்றை ஆதரிக்கின்றோம்.

பயனுள்ள கடல்சார் நிர்வாகமும் முக்கியமானதாகும். பாரம்பரிய அச்சுறுத்தல்களுக்கு மேலதிகமாக, இலங்கை போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பாரம்பரியமற்ற சவால்களையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

அது எமது கடற்படை மற்றும் கரையோரக் காவல்படையின் முக்கிய பணியாக இருந்து வருகின்றது என்பதையும் நான் இங்கே வலியுறுத்த விரும்புகிறேன்.

தேசியப் பாதுகாப்பு மற்றும் பொதுச் சுகாதாரத்தை உறுதிப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றது. அதேபோன்று, போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராட அரசாங்கம் ஏற்கனவே தடுப்பு நடவடிக்கைகளை அமுல்படுத்தி வருகிறது.

தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும் கடல்சார் பாதுகாப்பு சூழல் மற்றும் இலங்கை கடற்படையின் முக்கியமான பங்கை அங்கீகரித்து, அரசாங்கம் 2025 பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தில் கடற்படைக்காக 92.5 பில்லியன் ரூபாவை ஒதுக்கியிருந்தது, இது கடந்த வருடத்தை விட 12% விகித அதிகரிப்பாகும்.

இந்த முதலீட்டை தேசியப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், நமது கடல்சார் பகுதியைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கத்தின் ஆர்வத்தை வெளிப்படுத்தும் ஒரு சந்தர்ப்பமாகவே நான் கருதுகிறேன்.

போதைப்பொருள் மற்றும் கடத்தல்காரர்களைக் கைது செய்வதற்கான தினசரி ரோந்து சேவை, ஆய்வுகள் மற்றும் புலனாய்வு தகவல்களின் அடிப்படையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் நமது மக்களையும் கடல் பரப்பையும் பாதுகாக்க இலங்கை கடற்படை புரியும் அர்ப்பணிப்பைப் பாராட்ட இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்.

இந்தியக் கடல் பரப்பில் காணப்படுகின்ற இந்த சவால்களை இலங்கையால் மாத்திரம் தனித்து எதிர்கொள்ள இயலாது.

ஆகையினால் பயனுள்ள கடல்சார் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஏனைய நாடுகளின் செயற்பாட்டு ரீதியிலான ஒத்துழைப்பும் அவசியமாகின்றது.

கப்பல் போக்குவரத்துக்கான சுதந்திரம், சர்வதேச சட்டத்தை மதித்தல், கடற்கொள்ளை, கடத்தல் மற்றும் சட்டவிரோத நகர்வுகளுக்குப் பதிலளித்தல், தகவல் பரிமாற்றம் ஆகிய விடயங்கள் கடற்படை மற்றும் கரையோரக் காவல்படைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புதல் ஆகியவற்றின் மீதே தங்கி இருக்கின்றது.

இந்த அனைத்து விடயங்களிலும், மாலுமிகள், கடலோர சமூகங்கள் மற்றும் கடல் வளங்களை நம்பி வாழும் மக்கள் ஆகியோருக்கு வாய்ப்புகளையும் அனர்த்தங்களையும் சந்திக்க நேரிடுகின்றது.

கடற்படைகள் கடல் வழிகளைப் பாதுகாத்தல், ஆக்கிரமிப்பைத் தடுத்தல், சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுதல், மற்றும் மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கு உரிய பதிலைப் பெற்றுக் கொடுப்பதற்கு அவர்களுக்கிடையே நிலவுகின்ற வெளிப்படைத்தன்மை மிக்க, சர்வதேச சட்டத்தை மதிக்கும் கூட்டு கடல்சார் பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க பங்களிக்குமாறு இலங்கை அனைத்து தரப்பினரிடமும் கேட்டுக்கொள்கிறது.

ஒத்துழைப்பின் மூலம் இந்தியக் கடல் பரப்பில் அமைதி, செழிப்பு மற்றும் வாய்ப்புகள் நிறைந்த ஒரு பிராந்தியமாக மாற்ற முடியும். எந்தவொரு நாடும் தனியாக அவற்றை எதிர்கொள்ள இயலாது. பன்முகத்தன்மை, நாடுகளுக்கிடையேயான கூட்டாண்மை, கடற்படைகள், கடல் சார்ந்த தொழில்கள் மற்றும் சிவில் சமூகம் ஆகியவை அவற்றுக்கு அவசியமாகின்றன” எனப் பிரதமர் தெரிவித்தார்.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, அட்மிரல் ஒப் த பிளீட் வசந்த கரன்னாகொட, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்த, இந்திய கடற்படைத் தளபதி தினேஷ் கே திரிபாதி, இராணுவத் தளபதி லசந்த ரொட்ரிகோ, விமானப்படைத் தளபதி வாசுபந்து எதிரிசிங்க, கடற்படைத் தளபதி காஞ்சன பானகொட, கடற்படைப் பணிக்குழாம் தலைமை அதிகாரி டேமியன் பெர்னாண்டோ உள்ளிட்ட முப்படையின் அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

-பிரதமர் ஊடகப் பிரிவு

Related posts

தேசிய பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை உருவாக்க புதிய குழு

வை.எம்.எம்.ஏ. அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் [PHOTOS]

வாகன விபத்தில் 4 விமானப்படை வீரர்கள் பலி [VIDEO]