ஐஸ் உற்பத்தியுடன் தொடர்புடைய மூலப்பொருட்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் செயல்பாட்டில் ஓர் முன்னேற்றமாக அமைந்து காணப்படுகின்றது.
இந்த விடயம் வெளிக்கொணரப்பட்டதுடன் பல கேள்விக்குரிய விடயங்கள் வெளிவருவதனால், அரசாங்கம் இந்த விடயத்தின் உண்மையை தெளிவுபடுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த 2 கொள்கலன்களும் துறைமுகத்திலிருந்து எவ்வாறு வெளியே வந்தன என்பதுதான் இங்குள்ள கடுமையான பிரச்சினையாக காணப்படுகின்றன. சர்வதேச புலனாய்வு அமைப்புகள் நமது நாட்டில் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருளினது பரவல் தொடர்பிலான தகவல்களை தொடர்ந்தும் வழங்கி வருகின்றன.
இந்த இரண்டு கொள்கலன்கள் குறித்தும் சர்வதேச புலனாய்வு அமைப்புகள் நமது நாட்டிற்கு ஏலவே தகவல்களை தெரிவித்தனவா என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டி காணப்படுகின்றது.
இந்த புலனாய்வு தகவல் கிடைக்கப்பெற்ற திகதி, தகவல் குறித்து விசாரணைகளை நடத்திய நபர்கள் மற்றும் விசாரணைகள் நடத்தப்பட்ட காலப்பிரிவு, இந்த பரிசோதனைகளுக்குப் பிறகும், ஐஸ் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் அடங்கிய இந்த இரண்டு கொள்கலன்கள் துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டனவா போன்ற தகவல்களை அறிந்து கொள்வது அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களினது ஒன்றியத்தினருடன் இன்று (08) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இந்தக் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டிருந்தால், விடுவிக்கும் செயல்பாட்டில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பிலான உண்மை தன்மையை வெளிப்படுத்த வேண்டும்.
இது அரசாங்கத்தின் பொறுப்பாகும். சர்வதேச புலனாய்வு அமைப்புகள் இது குறித்த தகவல்களை தெரிவித்த பின்னர், குறித்த கொள்கலன்கள் அடையாளம் காணப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதா ? இந்த கொள்கலங்களை விடுவிப்பதற்கு ஏதுவாக அமைந்து காணப்பட்ட விடயங்கள் யாவை? அதே போல் சமீபத்தில் பரிசோதனை மேற்கொள்ளாமல் விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களும் இதைச் சேர்ந்ததா ? என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கேள்வி எழுப்பினார்.
போதைப் பொருள் உற்ப்பத்திக்கான மூலப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்கப்பட்டமை குறித்தான சகல தகவல்களையும் நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும். இந்த மூலப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இதனைச் சுற்றியுள்ள கேள்விகளுக்குரிய உண்மைகளை வெளிக்கொணர முடியும்.
இனம், மதம், சாதி, வர்க்கம் மற்றும் கட்சி வேறுபாடு இல்லாமல் போதைப்பொருள் அச்சுறுத்தலின் பரவலைத் தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இந்தப் பயணத்தின் போது உண்மையான தகவல்களை பொதுமக்களுக்குத் தெரிவிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.