ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘பொட்ட அமில’ மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகள் மூவர் இன்று (21) மதியம் மொரகஹஹேன பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து சுமார் 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான 5,300 போதைப்பொருள் மாத்திரைகள் மற்றும் 15,000 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த மோசடிக்காக பயன்படுத்தப்பட்ட 3 கையடக்க தொலைபேசிகளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
சந்தேக நபரின் நெருங்கிய கூட்டாளி ஒருவர் கோனபொல கும்புகவத்த பகுதியில் ஐஸ் போதைப்பொருள் விநியோகிக்க வருவதாக மொரகஹேன பொலிஸாருடன் இணைக்கப்பட்ட பிரிவு புலனாய்வுப் பிரிவு மற்றும் விசேட பணியக அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, சோதனை செய்த போது அவரது வசமிருந்து 2,200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
சந்தேக நபரிடம் விசாரித்தபோது, ’பொட்ட அமில’ மற்றொரு நபருக்கு வழங்குவதற்காக போதைப்பொருட்களை தனக்கு வழங்கியதாக அவர் கூறினார்.
பின்னர், ‘பொட்ட அமிலாவின்’ வீட்டில் அவரைக் கைது செய்வதற்காக நடத்தப்பட்ட சோதனையில், அவரும் மேலும் இருவரும் கைது செய்யப்பட்டதுடன், அவரிமிருந்து 10,100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 5,000 போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல், ஏனைய இரண்டு சந்தேக நபர்களிடம் இருந்து 2,100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 300 போதை மாத்திரைகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபரான ‘பொட்ட அமில’, என்பவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த தற்போது பூசா சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘மோல் கசுன்’ மற்றும் மன்னா ரமேஷ்’ ஆகியோரின் நெருங்கிய கூட்டாளி என்பதுடன், இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வேறொரு தரப்பினருடன் ஏற்பட்ட தகராறில் எசிட் தாக்குதலுக்கு உள்ளாகி பின்னர் கண் பார்வையை இழந்தவர் என பொலிஸ் தெரிவிக்கின்றனர்.
மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், நான்கு சந்தேக நபர்களையும் ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.