ஆயுர்வேத மசாஜ் சிகிச்சை நிலையங்களை சட்டப்பூர்வமாக்குவதற்கான சட்டமூலத்தை விரைவாக தயாரிக்க நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிடக் கோரி இலங்கை மசாஜ் நிலைய உரிமையாளர்கள் சங்கம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.
அதில் பிரதிவாதிகளாக பொலிஸ்மா அதிபர், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் ஆயுர்வேத ஆணையர் நாயகம் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
மனுதாரர்கள் தாங்கள் உரிமம் பெற்ற ஆயுர்வேத மசாஜ் (ஸ்பா) நிறுவனங்களைக் கொண்ட ஒரு சங்கம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
தாங்கள் நடத்தும் ஒவ்வொரு மசாஜ் நிலையங்களிலும் தகுதிவாய்ந்த ஆயுர்வேத மருத்துவர் மற்றும் தகுதிவாய்ந்த சிகிச்சையாளர்கள் இருப்பதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2019 ஆண்டுக்கு பின்னர் இத்தகைய மசாஜ் நிறுவனங்களை நடத்துவதற்கான உரிமங்களை வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக, இடையூறு இல்லாமல் தங்கள் பணியைத் தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பொலிஸார் அவ்வப்போது தங்கள் மசாஜ் நிலையங்களில் சோதனை நடத்தி தலையிட்டு வருவதாகவும், இதனால் தங்கள் தொழிலை சுதந்திரமாகத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், இதுபோன்ற மசாஜ் நிலையங்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டமூலத்தை தயாரிக்க அரசாங்கம் தயாராகி வருவதாக தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதன்படி, குறித்த சட்டமூலத்தை உடனடியாக தயாரித்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க சட்டமா அதிபருக்கு உத்தரவிடுமாறு மனுதாரர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.