உள்நாடு

பொலிஸாரை தாக்கிய சம்பவம் – முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்

பாதுக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது தாக்குதல் நடத்திய சீத்தாவாக்கை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மது போதையில் வாகனம் செலுத்திய ஒருவரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாதுக்க பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகளை அச்சுறுத்தி சீதாவாக்கை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் தாக்குதல் நடத்தியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

முன்னாள் பிரதேச சபை உறுப்பினரின் தாக்குதலில் காயமடைந்த பாதுக்க பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி தற்போது ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

நேற்று (15) பிற்பகல் பாதுக்க மாவத்தகம பகுதியில் முச்சக்கர வண்டியும் கார் ஒன்றும், மோதி விபத்துக்குள்ளானது

இதனை அடுத்து, பாதுக்க பொலிஸார் காரின் சாரதியை கைது செய்ய நடவடிக்கை எடுத்ததுடன், விபத்துக்குள்ளான காரையும் கைப்பற்றினர்.

எவ்வாறாயினும் காரின் சாரதி கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாதுக்க பொலிஸ் நிலையத்திற்கு சென்ற சீதாவாக்கை முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர், அங்கிருந்த பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.

பின்னர் அவர் பொலிஸாரை தாக்கிய நிலையில், மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் அவரை சிறைக்கு அழைத்து சென்றிருந்தனர்.

எனினும் பின்னர் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக அவரை ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

இந்தநிலையில் அவர் அங்கு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும் நிலையிலேயே ஹோமாகம பதில் நீதவான் வைத்தியசாலைக்கு சென்று சந்தேகநபரை பார்வையிட்டதன் பின்னர் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

உங்களுக்கும் இவ்வாறான தொலைபேசி அழைப்புகள் வந்ததா?

சர்வதேச இரத்தினக்கல், ஆபரண விற்பனை கண்காட்சியை பிரதமர் ஹரிணி திறந்து வைத்தார்

editor

பல்கலைக்கழக மாணவர்கள் பேருந்து விபத்து – இருவர் பலி – 35 பேர் காயம்

editor