பாணந்துறை பொலிஸ் பிரிவில் ஒருவரை கொலை செய்ய முயன்றதாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த ஒருவர் இன்று (22) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
மலேசியாவுக்குத் தப்பிச் செல்ல விமான நிலையத்திற்கு சென்ற போது, முக அங்கீகார அமைப்பு மூலம் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்.
கடந்த 11 ஆம் திகதி பாணந்துறை பொலிஸ் பிரிவில் உள்ள ஹிரான பகுதியில் ஹசித துலாஜ் என்ற நபரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் தேடப்பட்டு வந்த நபரான ரமேஷ் பேஷல என்ற 28 வயதான இளைஞரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இன்று காலை 10:40 மணிக்கு மலேசியாவுக்குப் புறப்படவிருந்த ஏர் ஏசியா விமானம் AK-44 இல் ஏறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
பின்னர், பாணந்துறை பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகள் குழு, சந்தேக நபரை அழைத்துச் சென்றுள்ளது.