இலங்கையும், முழு உலகமும் இந்த நேரத்தில் பொருளாதார போரையும், அமைதி தொடர்பான சவாலையும் எதிர்கொண்டுள்ளன.
இந்த சவால்களை வெல்ல புத்தர் காட்டிய தம்ம மார்க்கத்தில் தெளிவான தீர்வுகள் உள்ளன என வெசாக் தின வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள வெசாக் தின வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வு காணும்போது, பௌத்த தத்துவம் காட்டும் காரண-விளைவு அறத்தை நன்கு புரிந்துகொள்வது மிகவும் முக்கியமாகும்.
நாம் ஒரு நாடாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும், உலகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முயலும்போது, பிரச்சினையிலிருந்து எழும் விளைவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமே தவிர, அந்தப் பிரச்சினை எழுவதற்கான காரணத்தைக் கண்டறிந்து அதை அகற்றுவதற்கு முயற்சிப்பதில்லை.
ஏதேனும் ஒன்று எவ்வாறு உருவாகிறது என்பதற்கான காரணத்தைக் கண்டறிந்து அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும் என்று கற்பிக்கும் உயர்ந்த புத்த தம்மத்தை நாம் நடைமுறையில் உணர வேண்டியது அதனால்தான்.
இலங்கையும், முழு உலகமும் இந்த நேரத்தில் பொருளாதார போரையும், அமைதி தொடர்பான சவாலையும் எதிர்கொண்டுள்ளன.
இந்த சவால்களை வெல்ல புத்தர் காட்டிய தம்ம மார்க்கத்தில் தெளிவான தீர்வுகள் உள்ளன.
அரச நிர்வாகத்தில் தசராஜ தர்மம் போன்ற உயர்ந்த வழிகாட்டுதல்கள், அதேபோல் பொருளாதாரம், ஒற்றுமை, சமத்துவம், பன்முகத்தன்மை மூலம் ஒற்றுமையை எவ்வாறு உருவாக்குவது என்பது பௌத்த தத்துவத்தில் எந்த மதத்தவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் கற்பிக்கப்பட்டுள்ளது.
பௌதிக வளர்ச்சியோடு ஆன்மீக வளர்ச்சியும் ஒரு நாட்டின் வளர்ச்சியின் வலுவான தேவை என்பதை நன்கு உணர்ந்து செயல்படுவது அரசாங்க நிர்வாகத்தில் முக்கிய அம்சம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
நாம் உலகிற்கு வழங்கக்கூடிய விலைமதிப்பற்ற மிகவும் மதிப்புமிக்க சொத்து தூய தேரவாத தம்மமாகும். அதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், மகா சங்கத்தை அறிவால் வளர்த்தல், சங்க சாசனத்தின் நிலைத்தன்மை மற்றும் தொடர்ச்சிக்கான நமது பொறுப்பு மற்றும் கடமையை கைவிடக்கூடாத பணி என்பதை நாம் உறுதியாக புரிந்துகொள்ள வேண்டும்.
புத்தரின் பரிநிர்வாணத்திலிருந்து இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் கடந்த இந்த தருணத்தில், உலகெங்கிலும் உள்ள பௌத்தர்கள் வெசாக் தினத்தைக் கொண்டாடுவது அவரது தம்மத்தின் சிறப்பை உணர்ந்திருப்பதால்தான். புத்தர் தனது இறுதி படுக்கையில் கூறியதும் எனக்குப் பிறகு தம்மத்தை குருவாகக் கொண்டு செயல்படுமாறு தான்.
இந்த வெசாக் தினத்தில் நமது உறுதிமொழியும் அந்த உயர்ந்த நோக்கத்தின்படி தம்மத்தை குருவாகக் கொண்டு நல்ல உலகை உருவாக்க நமது அர்ப்பணிப்பாக இருக்க வேண்டும். அது வெறுப்பற்ற, அன்பால் நிறைந்த உலகிற்கான பாதையைத் திறக்கும்.
உங்கள் அனைவருக்கும் வெசாக் நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் மும்மணிகளின் ஆசி கிடைக்கட்டும் என அதில் மேலும் குறிப்பிடப்படடுள்ளுது.