அரசியல்உள்நாடு

பொருளாதார சுனாமியை எதிர்கொள்ள நேரிடும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

உண்மை, பொய் குறித்து நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஐக்கிய இராச்சிய முதலீட்டாளரின் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சாலையொன்று இன்று முற்றிலுமாக மூடப்பட்டு 2000 பேர் வீதிக்கு வந்துள்ளனர்.

2028 முதல் கடனை அடைக்க தற்போது 5% பொருளாதார வளர்ச்சி விகிதம் எமக்கு தேவையாக காணப்படுகிறது. தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கும் போது இந்த பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அடைவது சாத்தியமில்லை.

200 ஆடைத் தொழிற்சாலைகள் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது, ​​அதை ஆரம்பிப்பதைத் தடுப்பதற்கு மிரட்டல் விடுத்தவர்களும் இருந்தனர். இத்தகைய சூழ்நிலையில், நாம் 5% பொருளாதார வளர்ச்சி விகிதத்தை கொண்டு வர வேண்டும்.

அவ்வாறு இல்லையெனில், 2028 முதல் நமது கடன்களை மீளச் செலுத்த முடியாமல் மீண்டும் வங்குரோத்து நிலையை அடைவோம். இது நடந்தால், நாடு பொருளாதார சுனாமிக்கு முகம் கொடுக்க நேரிடும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பொருளாதாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (21) பாராளுமன்றத்தில் தனது கருத்துக்களை வெளியிட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.

next என்ற தொழிற்சாலை தற்போது மூடப்பட்டுள்ளது. தொழிற்சாலை உரிமையாளரின் கூற்றுப்படி, நாட்டில் பொருத்தமான பொருளாதார மற்றும் சமூக சூழல் இல்லை.

இலங்கையில் தற்போதைய உற்பத்தி செலவுகள் நிலையானதாக இல்லாததால் இந்த தொழிற்சாலையை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகள் காரணமாக எதிர்காலத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் இருப்பதாக ஆடைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்று பொருளாதாரம் வளர்வதற்குப் பதிலாக, பொருளாதாரத்திற்கு உந்து சக்தியாக இருக்கும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

உடனடியாக இந்த next தொழிற்சாலை உரிமையாளரைச் சந்தித்து இந்த விடயம் குறித்து கலந்துரையாடலை நடத்துங்கள். 200 ஆடை தொழிற்சாலைகள் திட்டத்திலிருந்து முன்ணுதாரணத்தை எடுத்துக் கொள்ளுமாறு நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். கடினமான காலங்களில் அரசாங்கம் தலையிட வேண்டும்.

உண்மை பொய் பற்றிய விவாதம் நடைபெறும் இந்த நேரத்தில், இது குறித்தும் ஆராயுமாறு நான் உங்களை வலியுறுத்துகிறேன். உழைக்கும் மக்களின் நாயகர்களாகத் தன்னைக் காட்டிக் கொண்ட இந்த அரசாங்கத்தின் பொறுப்பு, நாட்டின் உழைக்கும் மக்களைப் பாதுகாப்பதாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

குறைப்போம் என கூறிய மின்சாரக் கட்டணக் குறைப்பு எங்கே?

மின்சாரக் கட்டணத்தை ரூ. 9000-லிருந்து ரூ. 6000-ஆகக் குறைப்பதாகக் கூறிய அரசாங்கம், மின்சாரக் கட்டணத்தை 33% ஆல் குறைப்பதாகவும் வாக்குறுதியளித்தது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவும் இதனைத் தெரிவித்தார்.

மின்சாரக் கட்டணத்தை 33% ஆல் குறைப்பதாகக் கூறிய அரசாங்கம், இப்போது மின்சாரக் கட்டணத்தை 18% அதிகரிக்கப் போகிறது. இந்த அரசாங்கம் தற்போதுள்ள IMF இணக்கப்பாட்டை இரத்துச் செய்வதாக உறுதியளித்தது. ஆனால் இப்போது காணப்படும் அதே IMF இணக்கப்பாட்டின் கீழ் மின்சார கட்டணங்களை அதிகரிக்கத் தயாராகி வருகிறது. மின்சாரக் கட்டணத்தை இப்போது அதிகரிக்காவிட்டால், IMF இன் அடுத்த தவணை கிடைக்காது போகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

6.1 மில்லியன் மின்சார நுகர்வோர்கள் காணப்படுகின்றனர். 30 அலகுகள் வரை 15 இலட்சம், 60 அலகுகள் வரை 16 இலட்சம், மற்றும் 90 அலகுகளை பாவிப்போர்கள் 16 இலட்சம் என்றவிளவில் காணப்படுகின்றனர். சாதாரண மக்களுக்கு நிவாரணத்தை வழங்க வேண்டும். பொய் சொல்லாமல் உண்மையைப் பேச வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டைக் காப்பாற்றிய படை வீரர்களை அரசாங்கம் இப்போது மறந்து வருகிறது.

படை வீரர்களையும், படை வீரர்களை நினைவு கூர்வது குறித்தும் பேச்சுக்கள் நடந்து வருகின்றன. பயங்கரவாதத்திலிருந்து இந்த நாட்டை விடுவித்த படை வீரர்களையும் பாதுகாப்புப் படையினரையும் போர்வீரர்கள் என்று அழைப்பது வெட்கக்கேடான விடயமல்ல. படை வீரர்களை நினைவு கூறும் நாள் என்பது தங்கள் இரத்தத்தையும் சதையையும் தானம் செய்த படை வீரர்களின் குடும்பங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையாகும்.

அவர்களின் நலனுக்காக வலுவானதொரு திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். கடந்த காலங்களில், சிவில் பாதுகாப்புத் துறையைச் சேர்த்த 34,000 பேருக்கு அற்ப ஊதியத்தை வழங்கி வீட்டிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த அரசாங்கமும் இத்தகைய கொள்கையையே பின்பற்றி வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

கைவாறு அடிக்காமல், ஐக்கிய மக்கள் சக்திக்கும் பாதாள உலகத்திற்கும் இடையிலான தொடர்பை வெளிக்கொணருங்கள்.

ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த தலைவர்கள் பாதாள உலகத்துடன் தொடர்பு பட்டுள்ளனர் என்று நேற்றைய தினம் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் குற்றம் சாட்டினார். பாதாள உலகத்துடன் தொடர்புடைய ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த தலைவர்கள் யார் என்பதை நிரூபிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

வாய் இருப்பதற்காக பொய் சொல்லாமல் மக்களை ஏமாற்றாமல் உண்மையைச் சொல்லுங்கள். ஐக்கிய மக்கள் சக்திக்கு பாதாள உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டில் கொலைக் கலாச்சாரத்தைத் தடுக்க அரசாங்கம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதில் பிரச்சினை காணப்படுகின்றது.

மக்களின் வாழ்க்கையை அழிக்கும் இந்த நேரத்தில், இந்தக் கொலைகாரக் கும்பல்கள் மீது தெளிவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.

பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.

இன்று பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. தக்காளி 1114% ஆலும் மற்றும் கரட் 700% என்றவாறும் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன. இதனுடன் ஒப்பிடும்போது ஒரு குடும்பத்தின் வருமானமானது அதிகரிக்கவில்லை. நாட்டின் பொருளாதாரம் ஒரு இடத்தில் சிக்கியுள்ளது.

வருமானம் குறைந்து, சமத்துவமின்மை அதிகரித்து, வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு என்பன அதிகரித்துள்ளன. இந்த உண்மையின் மீது அரசாங்கம் தனது கவனத்தை திருப்ப வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

கொஞ்சம் உப்பைக் கூட ஒழுங்கா கொடுக்க முடியாத அரசாங்கம்.

நமது நாட்டில் தனிநபர் உப்பு நுகர்வு 9.2 கிராம் ஆகும். இதனை உலக சுகாதார ஸ்தாபனம் 5 கிராம் என்று கூறுகிறது. நமது நாட்டின் வருடாந்த உப்புத் தேவை 180,000 மெட்ரிக் டொன்கள் ஆக காணப்படுகின்றன. ஹம்பாந்தோட்டை, பலடுபான பூந்தல, மன்னார், ஆனையிறவு போன்ற உப்பளங்களில் 140,000-150,000 வரை உற்பத்தி செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. எமது நாட்டின் உப்புத் தேவையை இது பூர்த்தி செய்கிறதா என்பதில் பிரச்சினை காணப்படுகிறது.

இந்த அரசாங்கத்தால் கொஞ்சம் உப்பைக் கூட வழங்க முடியாது போயுள்ளது. அவ்வப்போது ஏற்படக்கூடிய பற்றாக்குறையைக் கூட இந்த அரசாங்கத்தால் கணிப்பிட முடியாது போயுள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு வேடிக்கையான கதைகளைச் சொல்ல மட்டுமே தெரியும்.

இந்த அரசாங்கத்திற்கு வேடிக்கையான கதைகளைச் சொல்ல மட்டுமே தெரியும். அரசாங்கம் அனுப்பிய கடிதத்தின் காரணமாகவே ஜனாதிபதி டிரம்ப் 90 நாட்களுக்கு வரி அறவீட்டை இடை நிறுத்தி வைத்ததாக நகைச்சுவைகளை சொல்லி வருகின்றனர்.

அரசாங்கம் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் தொடர்பாக கூட்டு அறிக்கை வெளியிடுவதாக ஆரம்பத்தில் தெரிவித்தனர். என்றாலும் அரசாங்கம் ஒருதலைப்பட்சமான அறிக்கையையே இறுதியில் வெளியிட்டது.

இவை வெறுமனே கேளிக்கையான கதைகள் ஆகும். தரவுகளுடன் பேசும்போது அரசாங்கத்தின் பொய்கள் அம்பலத்துக்கு வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

ரயிலுடன் மோதி ஐந்து காட்டு யானைகள் பலி

editor

உலகப் புகழ்பெற்ற அமெரிக்க பாடகர் எலோ பிளாக் இலங்கையில்

editor

இஸ்ரேலிய பிரதமர், ஹமாஸ் தலைவர்களுக்கு பிடியாணை!