ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி பதவிக்கும், பொதுத் தேர்தலில் 2/3 பெரும்பான்மையையும் ஜே.வி.பி தலைமையிலான இந்த திசைகாட்டி மக்களிடம் பொய்களைச் சொல்லி இரு பெரும் மக்கள் ஆணைகளைப் பெற்றன. இருந்த போதிலும், பெற்ற இரண்டு ஆணைகளுக்கும் தமது நியாயத்தை சரியாக செய்யவில்லை. தெளிவான அதிகாரம் கிடைத்தும் மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தவறிவிட்டது. இவ்வாறு இருந்து கொண்டு இவர்கள் இப்போது கிராமத்தினதும் நகரத்தினதும் அதிகாரத்தைக் கோரி நிற்கின்றனர்.
ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று நாம் கேள்வி எழுப்பிப் பார்க்க வேண்டும். சம்பிரதாய அரசியலும் ஆட்சியும் பொருத்தமற்றது என கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று சம்பிரதாய அரசியலையே முன்னெடுத்து வருகின்றனர்.
எனவே, மீண்டும் இவர்களுக்கு அதிகாரத்தை வழங்குவதா இல்லையா என்பது குறித்து மக்கள் மீண்டும் மீண்டும் சிந்தித்து பார்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சுப நேரத்தில் மக்கள் நாட்டை அநுரவிடம் ஒப்படைத்து, வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் எதிர்பார்த்தாலும், மக்கள் எதிர்பார்த்த வளமான நாடும் அழகான வாழ்க்கையையும் இன்னும் உருவாக்கப்படவில்லை.
இந்த யதார்த்தத்தை நாம் மனப்பூர்வமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாட்டில் பொய், ஏமாற்று, மோசடி மற்றும் அச்சம் மேலோங்கி நிற்கின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
உள்ளூர் அதிகார சபை தேர்தல்கள் 2025 நிமித்தம் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று (03) இரவு மத்திய கொழும்பு கிரான்ட்பாஸ் பிரதேசத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
உச்சம் தொட்டுள்ள பொருட்களின் விலைகளை ஆட்சிக்கு வந்ததன் பிறகு குறைப்பதாகச் சொன்னார்கள். அரிசி மற்றும் தேங்காய், பால் மா ஆகியவற்றின் விலைகளை குறைப்போம் என வாக்குறுதி வழங்கியிருந்தனர். தமது முதலாவது வரவுசெலவுத் திட்டத்திலயே 35,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக உறுதியளித்திருந்தாலும், இன்று அந்த வாக்குறுதியையும் மீறியுள்ளனர்.
🟩 மின்சாரக் கட்டணத்தை வாக்குறுதியளித்த படி குறைத்தனரா?
மின்கட்டணத்தை 33% குறைப்பதாகச் சொன்னார்கள். கனமழையில் இலாபம் ஈட்டும் போதும் மின்சார சபை மின்கட்டணத்தைக் குறைக்க முடியாது என தெரிவித்தது. பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவே மக்கள் தலையீட்டினால் 20% மின்கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுத்தது.
மின்சாரக் கட்டணம் ரூ.9000 இல் இருந்து ரூ.6000 ஆக குறைக்கப்படும், 33% ஆல் குறைக்கப்படும் என மேடைக்கு மேடை முழங்கினர். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு இன்னும் 6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாது என்று அரசாங்கம் அறிக்கை வெளியிட்டது.
எஞ்சியுள்ள 13% குறைப்பை செய்தாக வேண்டும். பொய் சொல்லும் அரசியல் மூலம் இந்த அரசாங்கம் மக்களை ஏமாற்றியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
🟩 அரசாங்கம் இப்போது IMF-க்கு அடிமையாகிவிட்டது.
இன்று IMF-க்கு உறுதியளித்தபடி மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் தயாராகி வருகிறது. முன்னாள் ஜனாதிபதி இணக்கப்பாடு கண்ட ஒப்பந்தமே எந்த திருத்தங்களும் இல்லாது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் மே 6 ஆம் திகதிக்குப் பிறகு இந்த புதிய மின்சாரக் கட்டண உயர்வு அமுலுக்கு கொண்டு வரப்படவுள்ளது.
இது நாட்டிற்கும் மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும். இது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி அண்மையில் கூறிய கணிப்பு சரியானது. மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் வரை விரிவான கடன் வசதியின் 4 ஆம் கட்ட நிதி எமக்கு கிடைக்காது.
🟩 சுத்த ஏமாற்று.
துறைமுகத்தில் இறக்கப்படும் அதே விலையிலேயே எரிபொருளை மக்களுக்கு வழங்குவோம் என வாக்குறுதியளித்தனர். இதில் பெரும் ஊழல் மற்றும் மோசடிகள் நடந்து வருகின்றன. இவற்றுக்கான வரிகளை ஒழித்து, குறைந்த விலையில் இவற்றை பெற்றுத் தருவோம் என வாக்குறுதி வழங்கினர். ஆனால் இன்று அந்த வாக்குறுதிகளை கூட மீறிவிட்டனர். 12 இலட்சத்துக்கு தருவதாக கூறிய விட்ஸ் காரும் இல்லை.
மூன்று வேளை தமது உணவுத் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டவர்கள் இன்று இரண்டு வேளை பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு வந்துள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஏமாற்று, மோசடிகளில் இந்த அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. விவசாயிகளுக்கு உர மானியங்களையும், தரமான உரங்களையும் பெற்றுத் தருவோம் என்று வாக்குறுதி வழங்கினர். எதிர்காலத்தில் உர மானியங்களை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பயிர் சேதம் மற்றும் சொத்து சேதத்திற்கான இழப்பீடுகள் கூட இன்னும் வழங்கப்படவில்லை. இந்த அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை ஒன்றன் பின் ஒன்றாக மீறி வருகிறது.
இப்போது பழைய பொய்களுடன் சேரத்து புதிய பொய்களையும் சொல்லி வருகிறது. தமது இயலாமையை மறைத்து மக்கள் ஆதரவை தக்க வைத்துக கொள்ள ஏதாவது ஒரு பட்டியலை வெளியிட்டு வருகிறது.
ஆனால் எடுத்த நடவடிக்கை ஒன்றும் இல்லை. அரசாங்கம் மக்களை முட்டாள்கள் போல் நடத்தி வருகின்றது.
இவை அனைத்தும் தேர்தலுக்காக அரசாங்கம் கூறும் பொய்கள். இவற்றைக் கண்டு மக்கள் ஏமாற வேண்டாம்.
ஜே.வி.பி ஆட்சியைக் கைபற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு மாத்திரமே நிதி வழங்குவோம் என ஜனாதிபதி பொதுவெளியில் பிரஸ்தாபித்தார். இது தான் இவர்களின் அரசியல்.
அவ்வாறே, இன்று பாதாள உலகக் கும்பல்கள், போதைப்பொருள் கும்பல்கள் சமூகத்தை ஆடகொண்டுள்ளன. வீட்டிலும், வீதிகளிலும், வேலை செய்யும் இடங்களிலும், நீதிமன்றத்திலும் கூட மக்களைக் கொலை செய்து வருகின்றனர்.
இவை தேசிய பாதுகாப்புக்கு பிரச்சினையாக அமைந்து காணப்படுகின்றன. நாடு தனது பாதுகாப்பை இழந்துவிட்டது. இந்த கொலை கலாச்சாரம் நாட்டில் சட்டத்தின் ஆட்சியை அழித்துவிட்டது. சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்து போயுள்ளது.
எனவே பொய்களை உரைத்து, மக்களை ஏமாற்றி வரும் இந்த அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைத்து, நாட்டை சரியான பாதையில் பயணிக்கச் செய்ய இந்த தேர்தலில் மக்கள் தமது வாக்குகளை புத்திசாதூர்யமாக பயன்படுத்த வேண்டும்.
கிராமத்தையும் நகரத்தையும் உண்மையிலயே கட்டியெழுப்பும் ஆற்றல் கொண்ட ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்குகளை வழங்குங்கள். இந்த தேர்தலை சரியாக பயன்படுத்துங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.