கண்டி பொலிஸ் பிரிவின் ஹந்தானை பகுதியில் கடந்த 25 ஆம் திகதி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் சாரதியை தாக்கிய சம்பவம் தொடர்பாக கண்டி பொலிஸார் மூன்று சந்தேக நபர்களையும் ஒரு பெண் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 21, 26, 27 வயதானவர்கள் என்றும், பெண் சந்தேக நபர் 38 வயதானவர் என்றும், அவர்கள் கண்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரத்திலிருந்து ஹந்தானை மலைத்தொடரைப் பார்வையிட பாடசாலை மாணவர்கள் குழுவை ஏற்றிச் சென்ற குறித்த தனியார் பேருந்து, முச்சக்கர வண்டியுடன் மோதியது.
விபத்துக்குப் பிறகு, ஹந்தானை பகுதியில் பேருந்தின் சாரதி மீது ஒரு குழு தாக்குதல் நடத்தியது.
தாக்குதலில் காயமடைந்த பேருந்தின் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், பேருந்தில் இருந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சாரதியை தாக்க வேண்டாம் என்று கூறிய போதிலும், சம்பந்தப்பட்ட குழுக்கள் சாரதியை தாக்கியுள்ளனர்.
அதன்படி, தாக்குதலில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்களும் பெண் சந்தேக நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நேற்று (26) கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இதன்போது பெண் சந்தேக நபரை பிணையில் செல்ல அனுமதித்து நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏனைய மூன்று சந்தேக நபர்களையும் நாளை (28) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.