முதல் நாள் வசூலில் ரஜினியின் ‘கூலி’ வியத்தகு சாதனை படைத்திருப்பதாக வர்த்தக் நிபுணர்கள் தகவல் பகிர்ந்துள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நாளை (14) வெளியாகிறது.
தமிழகத்தில் முதல் காட்சி காலை 9.00 மணிக்கும், இதர மாநிலங்களில் காலை 6.00 மணிக்கும் திரையிடப்படவுள்ளது.
அனைத்து மாநிலங்களிலும் டிக்கெட் முன்பதிவில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது ‘கூலி’.
இந்த முன்பதிவு மற்றும் டிக்கெட் விற்பனை வைத்து பார்த்தால், முதல் நாளில் கண்டிப்பாக ரூ. 150 கோடியைத் தாண்டி வசூல் இருக்கும் என்கிறார்கள் வர்த்தக நிபுணர்கள்.
தமிழ் படங்களில் உலகளவில் முதல் நாளில் ரூ. 148 கோடி வசூல் செய்து ‘லியோ’ முதல் இடத்தில் இருக்கிறது. இதனை கண்டிப்பாக ‘கூலி’ தாண்டிவிடும் என்கிறார்கள்.
ஏனென்றால் வட இந்தியா தவிர்த்து இதர மாநிலங்கள் அனைத்திலுமே டிக்கெட் முன்பதிவிலேயே பல்வேறு படங்களில் சாதனை முறியடித்திருக்கிறது.
குறிப்பாக, ஆந்திராவில் ஜூனியர் என்.டி.ஆர், ஹரித்திக் ரோஷன் நடித்துள்ள ‘வார் 2’ படத்துக்கான டிக்கெட் முன்பதிவிவை விட ‘கூலி’ படத்துக்கான டிக்கெட் முன்பதிவு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போதைய வசூல் நிலவரப்படி, முதல் நாளில் ரூ. 160 கோடிக்கு நெருக்கமாக இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் தமிழ் படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்ற இமாலய சாதனையை படைக்கவுள்ளது ‘கூலி’. இதனையும் ‘லியோ’ படத்தையும் இயக்கியவர் லோகேஷ் கனகராஜ் தான் என்பது நினைவுகூரத்தக்கது.