அரசியல்உள்நாடு

புத்தாண்டு காலப்பகுதியில் ரூ. 5,000 அத்தியாவசிய பொதி ரூ. 2,500 விலையில் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

புத்தாண்டு காலப்பகுதியில் தெரிவு செய்யப்பட்டுள்ள அஸ்வெசும பயனாளிகளுக்கு 5000 ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதியை 2500 ரூபாய் சலுகை விலைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்று (26) காலை கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு சலுகை விலையில் உணவுப் பொதியொன்றை வழங்குவதற்காக ஜனாதிபதி, 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சமர்ப்பித்துள்ள முன்மொழிவுக்கமைய, 5,000/- பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய ‘காலத்தின் தேவைக்கான உணவுப் பொதியொன்று’ 2,500/- ரூபாவுக்கு வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்காக, அஸ்வெசும நலன்புரி நன்மைகளை எதிர்பார்த்து புதிதாக விண்ணப்பித்துள்ள 812,753 விண்ணப்பங்களில் தகைமையுடைய பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கமைய, 2025.04.01 தொடக்கம் 2025.04.13 வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள சதொச விற்பனை நிலையங்களிலும் COOPFED விற்பனை நிலையங்கள் மூலமும் உணவுப் பொதியை பயனாளிகளுக்கு வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts

அடையாள அட்டை இறுதி இலக்கத்தின் அடிப்படையில் வீட்டிலிருந்து வெளியேறலாம்

ஆபிரிக்க நாடுகளிலிருந்து 289 பேர் நாடு திரும்பினர்

டெங்கு நோயை கட்டுப்படுத்த Wolbachia பக்டீரியா