“மேர்ஸி கல்வி வளாகத்தில் ஒரு மாணவன் ஆசிரியரால் தாக்கப்பட்டார்” என்ற தலைப்பில் நேற்றைய தினத்தில் இருந்து (11-10-2025) ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்ற செய்தி தொடர்பான உண்மை நிலையை தெளிவு படுத்தும் நோக்கில் ஒரு பொறுப்பு வாய்ந்த நிறுவனமாக மேற்படி விடயம் சம்பந்தமாக இவ்விளக்கம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படுகிறது.
கடந்த 16 வருட வரலாற்றில் நூற்றுக்கணக்கான புத்திஜீவிகள், ஹாபிழ்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மற்றும் தொழில் விற்பண்ணர்களை உருவாக்கியுள்ள மேர்ஸி கல்வி வளாகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் உண்மைக்கு முரணான வகையில் திரிபுபடுத்தப்பட்ட இச்செய்தி திட்டமிட்ட அடிப்படையில் பரப்பப்படுவது தொடர்பில் நாம் கவனம் செலுத்தி வருகிறோம்.
ஆசிரியர்கள் அல்லது பொறுப்பாளர்கள் இங்கு பயிலும் மாணவர்களுடன் நடந்து கொள்ள வேண்டிய ஒழுங்குகள் தொடர்பில் மிகவும் கடுமையான விதிகளை மிகவும் இறுக்கமாக நடைமுறைப்படுத்துகின்ற நாம், மாணவர்களுக்கு தண்டனை வழங்குவது தொடர்பில் அதிலும் குறிப்பாக Corporal Punishment எச்சந்தர்ப்பத்திலும் வழங்கப்படக் கூடாது என்பது தொடர்பில் மிகவும் கடுமையான விதிகளை அமுல்படுத்துகிறோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த 08.10.2025 ம் திகதி இரவு நேர பாடமீட்டலின் போது, விடுதிப் பொறுப்பாளர்களில் ஒருவர் ஒரு மாணவனைத் தண்டித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பில் மிகவும் கவனமாகவும் பொறுப்பாகவும் செயற்பட்ட நாம் உடனடியாக குறித்த மாணவனுக்குத் தேவையான உதவிகளைச் செய்ததோடு எமது நிறுவனத்தின் ஒழுங்குகளையும் விதிமுறைகளையும் வளாக ஊழியர்கள் ஏற்று ஒப்பமிட்டுள்ள Code of Conduct நடத்தை நெறிமுறைகளையும் மீறிச் செயற்பட்ட குறித்த விடுதிப் பொறுப்பாளரை உடனடியாக பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுத்தோம்.
அத்தோடு குறித்த மாணவனூடாக அவரின் தாயாரைத் தொடர்பு கொண்டு சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தியதோடு பொலிஸ் விசாரணையின் போதும் சட்ட நடவடிக்கைகளின் போதும் குறித்த மாணவன் சார்பாக பக்கபலமாக இருந்து வருகிறோம்.
இலங்கையின் நாலா புறங்களிலுமிருந்து வந்த வெவ்வேறு பின்னணிகளைக் கொண்ட 800 இற்கு மேற்பட்ட முழு நேர மாணவர்களை கண்ணியமாகவும் கவனமாகவும் பராமரிக்கும் எம் பணிகளுக்கு, குறித்த விடுதிப் பொறுப்பாளரின் தனிப்பட்ட பொறுப்பற்ற நடவடிக்கையினால் ஏற்பட்ட களங்கத்திற்காக மிகவும்
வருந்துகின்றோம்.
அத்தோடு எமது நிறுவனத்துக்கு அவப் பெயரையும் களங்கத்தையும் ஏற்படுத்தும் நோக்குடனும் எமது மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் எமது நிறுவனம் தொடர்பில் வைத்துள்ள அதீத நம்பிக்கையை சிதைக்கும் நோக்கத்துடனும் பொய்யான, மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை வெளியிடும் அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளோம் என்பதையும் அறியத் தருகிறோம்.
எமது நிறுவனத்துக்கு நீங்கள் வழங்கும் ஆதரவுக்காக எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு நீங்கள் எம் மீது வைத்துள்ள நம்பிக்கையைத் தொடர்ந்தும் கட்டிக் காப்போம் என்ற உறுதியையும் இத்தால் வழங்குகிறோம்.
மேர்ஸி கல்வி வளாக நிர்வாகம்
மதுரங்குளி, புத்தளம்
12-10-2025