உள்நாடுபிராந்தியம்

புத்தளம் மாவட்டத்தின் புதிய செயலாளராக கடமையேற்றார் வை.ஐ.எம்.சில்வா!

புத்தளம் மாவட்டத்தின் புதிய மாவட்ட செயலாளராக கைத்தொழில் அமைச்சின் மேலதிக செயலாளராக (அபிவிருத்தி) கடமையாற்றிய வை.ஐ.எம்.சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

புத்தளம் மாவட்ட செயலாளராக கடமையாற்றி வந்த எச்.எம்.எஸ்.பீ. ஹேரத் , களுத்துறை மாவட்ட செயலாளராக இடமாற்றப்பட்டதை அடுத்து, புத்தளம் மாவட்டத்தின் புதிய மாவட்ட செயலாளராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட செயலாளர் வை.ஐ.எம்.சில்வா தனது கடமைகளை நேற்று திங்கட்கிழமை (01) தனது உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றார்.

இந்த நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் (நிர்வாகம்) புபுதிகா எஸ் பண்டார, மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) சதுரக ஜயசிங்க, உதவி மாவட்ட செயலாளர் நிமேஷா ஜயபத்ம, பிரதம கணக்காளர் ஏ.எம்.டபிள்யூ. கே.பிரசன்ன, கணக்காளர் எஸ்.அருண் குமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

2004 ஆம் ஆண்டு நொச்சியாகம பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக அரச துறையில் தனது பணியை ஆரம்பித்த இவர், 2007 ஆம் ஆண்டு முதல் பிரதேச செயலாளராக பதவியுயர்த்தப்பட்டார்.

பின்னர் கம்பஹா மாவட்டத்தின் மீரிகம பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக கடமையாற்றிய இவர் சுங்கத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளராகவும், விமான நிலைய சுங்கப் பிரிவு பணிப்பாளராகவும், அரச கைத்தொழில் சபையின் (நிர்வாக) பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

மேலும், கடந்த 2024 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் சிறப்பு தரத்தை பெற்றுக் கொண்ட இவர், அதே ஆண்டு செப்படம்பர் மாதம் கைத்தொழில் அமைச்சின் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இவ்வாறு சுமார் ஒரு வருடங்களாக கைத்தொழில் அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றி வந்த வை.ஐ.எம்.சில்வா, இம்மாதம் முதலாம் திகதியில் இருந்து புத்தளம் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவையில் கடந்த 22 வருடங்கள் அனுபவம் கொண்ட இவர், களனிப் பல்கலைக்கழகத்தில் மனித வள முகாமைத்துவத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளதுடன், நுவரெலியா காமினி மத்திய கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-ரஸீன் ரஸ்மின்

Related posts

மிகை வரி சட்டமூலம் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது

பிள்ளையானுக்கு கன்னி அமர்வில் கலந்து கொள்ள நீதிமன்றம் அனுமதி

இலங்கை மாணவர்களுக்கு சீன மக்களால் அரிசி