அரசியல்உள்நாடு

புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டை பிளவுபடுத்த சூழ்ச்சி – மஹிந்த ராஜபக்ஷ

தேசியம் ,பௌத்தம் பற்றி நாமல் ராஜபக்ஷ மாத்திரமே பேசுகிறார். ஏனைய வேட்பாளர்கள் புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டை பிளவுப்படுத்துவது பற்றி பேசுகிறார்கள். எக்காரணிகளுக்காவும் நாட்டை பிளவுபடுத்த நாங்கள் இடமளிக்க போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அம்பாறையில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டின் தேசிய பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் நான் உறுதிப்படுத்தினேன். அபிவிருத்திகளை துரிதமான மேற்கொண்டு தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தினேன்.

2005 ஆம் ஆண்டு அரசாங்கத்தை பொறுப்பேற்கும் போது பொருளாதார நிலைமை 15 பில்லியன் டொலர்களாக காணப்பட்டது. 2014 ஆம் ஆண்டு 85 பில்லியன் டொலர் கையிறுப்புடன் அரசாங்கத்தை ஒப்படைத்தேன்.

ஊழலை முடிவுக்கு கொண்டு வருவதாக குறிப்பிட்டுக் கொண்டு 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் தேசிய பொருளாதாரத்தையும், தேசிய பாதுகாப்பையும் பலவீனப்படுத்தியது.

2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எம்மை ஊழல்வாதிகளாக சித்தரித்து அதிகாரத்தை கோரியவர்கள் இம்முறையும் அதிகாரத்தை கோருகிறார்கள்.

வெறுப்பினை முன்னிலைப்படுத்தி செயற்படும் இவர்ககளால் பொருளாதாரத்தை ஒருபோதும் மேம்படுத்த முடியாது. சூழ்ச்சிகளினால் தான் நாங்கள் 2015 ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டோம். அந்த சூழ்ச்சி இன்றும் தொடர்கிறது.

ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார மேடைகளில் நாமல் ராஜபக்ஷவை தவிர்த்து எவரும் தேசியம் மற்றும் பௌத்தம் பற்றி பேசுவதில்லை. நாட்டை பிளவுப்படுத்தும் புதிய அரசியலமைப்பு பற்றி பேசுகிறார்கள். எக்காரணிகளுக்காகவும் நாட்டை பிளவுபடுத்த நாங்கள் இடமளிக்கமாட்டோம்.

தேசியத்தை பாதுகாப்பதற்கு அனைவரும் எம்முடன் கைகோர்க்க வேண்டும். பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் நிச்சயம் தோற்றம் பெறும் என்பதை உறுதியாக குறிப்பிடுகிறேன் என்றார்.

-இராஜதுரை ஹஷான்

Related posts

15 வயது மாணவனும் மாணவியும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வௌியான திடுக்கிடும் தகவல்கள்

உலக உணவுத் திட்டத்தின் கீழ் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு!

 தபால் மூல வாக்களிப்பு தொடர்பான தகவல்