மூதூர் சதாம் வித்தியாலயத்திற்கு முன்பாக பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை இன்று (29) திங்கட்கிழமை நடத்தியுள்ளனர்.
புதிய அதிபர் நியமனத்தை இடைநிறுத்தக் கோரி, பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் சுலோகங்கள் ஏந்தியபடி இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னர் இருந்த அதிபர் கல்வி நடவடிக்கைகளிலும் ஒழுக்கங்களிலும் வீழ்ச்சி அடைந்திருந்த பாடசாலையை மீண்டும் முன்னேற்றப் பாதையில் கொண்டு வந்ததாகவும், அவர் தொடர்ச்சியாக கடமையாற்றினால் இன்னும் பல முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
இந்தச் சம்பவம் குறித்து அறிந்த உடனே மூதூர் வலயக் கல்வி அலுவலக அதிகாரிகளும், பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழுவினரை வலயக் கல்வி அலுவலகத்திற்கு வருமாறு வலயக் கல்விப் பணிப்பாளர் கேட்டுக்கொண்டார்.
பின்னர் அவர்களிடம் விளக்கங்கள் கேட்டு அறிந்த வலயக் கல்விப் பணிப்பாளர், இக்கோரிக்கைகளை எழுத்து மனு மூலம் சமர்ப்பிக்குமாறு பெற்றோர்களையும் பொதுமக்களையும் கேட்டுக்கொண்டார்.
-முஹம்மது ஜிப்ரான்