பிரித்தானிய அரசாங்கம் விதித்துள்ள தடை தொடர்பாக தான் பொருட்படுத்தப்போவதில்லை என கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின்போது கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்பான நபர்களுக்கு பிரித்தானிய அரசாங்கம் நேற்று முதல் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த விநாயகமூர்த்தி முரளிதரன்,
”நான் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை. அதனால் இந்த தடை என்னை பாதிக்காது. எனது அரசியலையும் பாதிக்காது.
நான் அவ்வாறு செயற்பட்டிருந்தால் நான் தஞ்சமடைந்த காலப்பகுதியில் பிரிட்டன் என்னை கைதுசெய்திருக்கலாம். ஏன் என்னை பத்திரமாக திருப்பி அனுப்ப வேண்டும்? எனவே, இந்த தடை உத்தரவு என்னை பாதிக்காது. அதனால் இதனை நான் பெரிதாக பொருட்படுத்தப்போவதில்லை” என தெரிவித்தார்.
உள்நாட்டு போரின்போது கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு காரணமாக கருதப்படும் இலங்கையின் முன்னாள் மூத்த இராணுவத் தளபதிகள் மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) உள்ளிட்டோர் பிரித்தானியாவால் தடைசெய்யப்பட்ட நபர்களாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.