உலகம்

பிரான்சின் புதிய பிரதமராக செபாஸ்டியன் லெகோர்னு நியமனம்

பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன், பிரதமர் பிரான்சுவா பய்ரூ அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த 24 மணி நேரத்துக்குள், தனது நெருங்கிய கூட்டாளி செபாஸ்டியன் லெகோர்னுவை (39) புதிய பிரதமராக நியமித்துள்ளார்.

மூன்று ஆண்டுகளாக பாதுகாப்புத் துறையை கவனித்த லெகோர்னு, மக்ரோனின் ஏழாவது பிரதமர் ஆவார். அவருக்கு அரசியல் கட்சிகளுடன் ஆலோசித்து அடுத்த வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பய்ரூ முன்வைத்த 44 பில்லியன் யூரோ செலவு குறைப்புத் திட்டம் நம்பிக்கை வாக்கெடுப்பில் 364–194 வாக்குகள் வித்தியாசத்தில் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் இராஜினாமா செய்தார்.

லெகோர்னுவின் நியமனத்தை மத்தியவரிசைக் கட்சிகள் வரவேற்றுள்ளன. ஆனால் இடதுசாரி மற்றும் வலதுசாரிகள் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

ஜான்-லூக் மெலன்சன் (இடதுசாரி) மாற்றமே இல்லை என விமர்சித்தார். மரீன் லெ பென் (வலதுசாரி) “மக்ரோனின் இறுதி முயற்சி” எனக் கூறினார்.

பிரான்ஸ் தற்போது மூன்று முக்கிய அரசியல் பிளாக்குகளால் (இடது, வலது, மையம்) பிளவுபட்டுள்ளது. புதிய பிரதமரின் முதன்மைப் பணி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 114% ஆக உயர்ந்துள்ள 3.3 டிரில்லியன் யூரோ கடனை கட்டுப்படுத்துவதாகும்.

இதற்கிடையில், “பிளோக்கோன் டூட்” (எல்லாவற்றையும் முடக்கு) என்ற பொதுமக்கள் இயக்கம் புதன்கிழமை பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக 80,000 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

மேலும், வெள்ளிக்கிழமை ஃபிட்ச் நிறுவனம் பிரான்ஸ் கடன் மதிப்பீட்டை மறுபரிசீலனை செய்ய உள்ளது. அது குறைக்கப்பட்டால் நாட்டின் கடன் செலவுகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

Related posts

தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட ரஷ்ய அதிபர்

அமெரிக்காவில் காட்டுத் தீ – 30,000 பேர் வெளியேற்றம்

editor

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

editor