வெளிவிவகார, சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத்திற்கும், பிரபல இந்திய நடிகரும் தயாரிப்பாளருமான ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா பிரான்சிஸிற்கும் இடையில் இன்று (19) காலை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
அமைச்சர் விஜித ஹேரத் இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
இலங்கையில் திரைப்பட சுற்றுலாவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கியமான கலந்துரையாடல் இதன்போது இடம்பெற்றுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சுற்றுலா தலங்களையும் இலங்கையின் வளமான கலாச்சாரத்தையும் ஊக்குவிக்கும் எதிர்கால திரைப்பட தயாரிப்பு மற்றும் இசை நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்தும் இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள கண்கவர் இடங்களுக்கு மேலும் சுவாரஸ்யமான கதைகள் மற்றும் வெளிநாட்டு தயாரிப்புகளைக் கொண்டு வர எதிர்பார்ப்பதாக வெளிவிவகார, சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தமது எக்ஸ் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.