பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் 07.01.2026ல் பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற போது அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கருத்து தெரிவிக்கையில்
அம்பாறை மாவட்டத்தில் சென்ற 2024 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது உலர் உணவு வழங்குவதற்காக தனியார் கடைகள் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில் மற்றும் லஹுகல பிரதேச செயலாளர்களுக்கு வழங்கிய பொருட்களுக்கான கொடுப்பனவுகள் இதுவரையும் வழங்கப்படவில்லை.
இதனால் தனியார் கடை உரிமையாளர்கள் நீதிமன்றம் சென்று பிரதேச செயலாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
சில பிரதேச செயலாளர்களையும், கணக்காளர்களையும் நீதிமன்றத்திற்கு வருமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இது மிகவும் கவலைப்பட வேண்டிய விடயமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவுப் பொருட்களுக்கான தொகையும் பாதிக்கப்பட்டவர்களின் தொகைக்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் பதிலளித்தனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை நிர்வாக ரீதியில் தவறுகள் நடந்தால் விசாரணைகள் மேற்கொள்ளுங்கள் ஆனால் தனியார் கடைகள் அரசாங்கத்திற்கு கடன் வழங்கி 15 மாதங்கள் சென்றுள்ளன. எனவே, தனியார் கடைகளுக்கான கொடுப்பனவுகளை வழங்குங்கள் என கேட்டுக் கொண்டார்.
பிரச்சினை உள்ள பிரதேச செயலகத்தை தவிர ஏனைய பிரதேச செயலகங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.
-கே எ ஹமீட்
