உரிமம் இல்லாமல் 50 கோடி ரூபாய் மதிப்புள்ளதாகக் கூறி இரத்தினக் கல் ஒன்றை விற்பனை செய்ய முயன்ற குண்டசாலை பிரதேச சபை உறுப்பினர் உட்பட மூவர் நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மடவல மற்றும் வத்தேகமவைச் சேர்ந்த 40-50 வயதுக்குட்பட்ட மூன்று சந்தேகநபர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இரத்தினக் கல் வாங்குபவர்களுக்கு அதிர்ஷ்டம் தரும் எனக் கூறி, 50 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்ற இவர்கள், பொலிஸாரின் விசேட நடவடிக்கையில் சிக்கினர்.
பொலிஸார் தரகர் ஒருவரைப் பயன்படுத்தி, விலையை 10 இலட்ச ரூபாயாகக் குறைக்க வைத்து, சந்தேகநபர்களை கைது செய்தனர்.
கைப்பற்றப்பட்ட இரத்தினக் கல் உண்மையானதா அல்லது போலியானதா என்பதை உறுதிப்படுத்த, தேசிய இரத்தினக் கல் மற்றும் நகைகள் அதிகாரசபையிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில்,
நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.