கல்விப் புத்தகத்தில் வயது வந்தோருக்கான இணையதளக் குறிப்புகள் (adult web content) இடம்பெற்றமை தொடர்பான சர்ச்சையை அடுத்து, பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்விடயம் குறித்து கருத்து தெரிவித்த வீரவங்ச, இவ்வாறான குறிப்புகள் பள்ளி மாணவர்களிடையே ஆர்வத்தைத் தூண்டி, அவர்களைத் தகுதியற்ற விடயங்களை பரீட்சித்துப் பார்க்க வழிவகுக்கும் என்றும், இது நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு பாரிய அச்சுறுத்தலாகும் என்றும் கூறினார்.
நாட்டின் மனித வளத்தை சீர்குலைக்கும் முயற்சியாகவே இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாகக் குற்றம் சுமத்திய அவர், உயர்மட்டத் தலைவர்களுக்கு தெரியாமல் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார்.
பிரதமர் உடனடியாகப் பதவியிலிருந்து விலக வேண்டும் என வலியுறுத்திய விமல் வீரவங்ச, அவர் அவ்வாறு செய்யத் தவறினால், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், கல்வி அமைச்சைக் குறிவைத்து மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் எச்சரித்தார்.
