அரசியல்உள்நாடு

பிரஜாசக்தி வேலைத்திட்டத்திற்கு புதிய டிஜிட்டல் கட்டமைப்பு

சமூக வலுவூட்டல் ஊடாக வறுமையை ஒழித்தல் மற்றும் பொருளாதார நீதியை உறுதி செய்வதற்காக புதிய அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘பிரஜாசக்தி’ தேசிய இயக்கம், தற்போது நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இத்திட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுப்பதற்காக புதிய டிஜிட்டல் கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

‘பிரஜாசக்தி’ தேசிய வேலைத்திட்டம் குறித்து நாட்டின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் கடமையாற்றும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பூளர்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக இன்று (24) அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வின் போதே இவ்விடயம் குறிப்பிடப்பட்டது.

இதில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ‘பிரஜாசக்தி’ தேசிய இயக்கமானது புதிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வறுமை ஒழிப்புக்கான பிரதான அபிவிருத்தி வேலைத்திட்டமாகும் எனக் குறிப்பிட்டார்.

2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள் மற்றும் முன்மொழிவுகள் ஊடாக கிராமிய அபிவிருத்திக்காக சுமார் 180 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அந்த ஒதுக்கீடுகளைப் பயன்படுத்தும் போது கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள சமூக அபிவிருத்திச் சபைகளுக்கு விசேட பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

அந்தப் பணிகள் அனைத்தையும் அதிகபட்ச வினைத்திறனுடனும் பயனுள்ள வகையிலும் நடைமுறைப்படுத்தும் போது, பிரதேச செயலகப் பிரிவுகளில் இணைக்கப்பட்டுள்ள பிரதி மற்றும் உதவிப் பணிப்பாளர்களிடம் பாரிய பொறுப்பு காணப்படுவதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

சமூக அபிவிருத்திச் சபைகளினால் 2026 ஆம் ஆண்டிற்கான அபிவிருத்தி முன்மொழிவுகளை அடையாளம் காணல், அவற்றை முன்னுரிமைப்படுத்தல் மற்றும் அந்த அபிவிருத்தி முன்மொழிவுகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக்க பண்டார இதன்போது தெரிவித்தார்.

அதன்கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ள சமூக அபிவிருத்திச் சபைகள் செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், ஒட்டுமொத்த சமூகத்தினதும் முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் வகையில் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிக்க வேண்டியதன் அவசியம், திட்டங்களைச் சரியாக அடையாளம் காணல் மற்றும் விஞ்ஞான ரீதியான அடிப்படையில் திட்டங்களை முன்னுரிமைப்படுத்தும் விதம் குறித்தும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர், நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்துகொண்ட பிரதி மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் தெளிவுபடுத்தினார்.

அந்தச் செயன்முறையை மேற்கொள்வதற்கு அவசியமான தொழில்நுட்ப விடயங்கள் குறித்தும் அவர் இதன்போது விரிவாகக் கலந்துரையாடினார்.

முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமுமான ரங்க திஸாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், அரச சேவையில் இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழித்து நேர்மையை உறுதி செய்வது சமூகத்தின் முன்னோக்கிய பயணத்திற்கு எவ்வளவு தீர்க்கமானது என்பது குறித்தும், அரச உத்தியோகத்தர்களுக்கு அதற்கான பொறுப்பு மற்றும் பொறுப்புக்கூறல் குறித்தும் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்பாளர் சோமசிறி ஏக்கநாயக்க, ‘பிரஜாசக்தி’ தேசிய இயக்கத்தை நடைமுறைப்படுத்தும் போது பிரதி மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர்களுக்கு வழங்கப்படும் பொறுப்புக்கள் மற்றும் பணிகள் குறித்து விளக்கமளித்தார்.

Related posts

வேட்பாளர் பயணித்த கார் மீது கல்வீச்சு தாக்குதல்

editor

எரிபொருள் இறக்குமதி, விநியோகம் மற்றும் விற்பனைக்கு மேலதிக நிறுவனங்கள்

6 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்ட ரயில் சேவை!