அரசியல்உள்நாடு

பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகத்தை நீக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை – லக்ஷ்மன் கிரியெல்ல

இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகத்தை பதவியிலிருந்து நீக்குவதற்கோ அல்லது பணியிடை நீக்கம் செய்வதற்கோ சபாநாயகருக்கு எவ்வித சட்ட அதிகாரமும் கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

எதுல்கோட்டேயிலுள்ள அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி பிரதான காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை நாடாளுமன்றமானது நிலையியற் கட்டளைகள் மற்றும் நாடாளுமன்ற வரப்பிரசாதங்கள் மற்றும் அதிகாரங்கள் சட்டம் ஆகிய இரண்டு முக்கிய சட்டக் கோவைகளின் கீழேயே இயங்குவதாகச் சுட்டிக்காட்டிய அவர், எமது நாட்டின் நிலையியற் கட்டளைகளின் கீழ் பிரதிச் செயலாளர் நாயகம் ஒருவரை நீக்குவதற்கான எந்தவொரு விதிமுறையும் இல்லையெனக் குறிப்பிட்டார்.

இவ்வாறான சூழலில், பிரித்தானிய நாடாளுமன்ற மரபுகள் மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ‘பைபிள்’ என்று போற்றப்படும் ‘Erskine May’ நூலில் குறிப்பிடப்பட்டுள்ள முன்னுதாரணங்களைப் பின்பற்ற இலங்கை நாடாளுமன்றம் சட்ட ரீதியாகப் பிணைக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்தார்.

நாடாளுமன்றத்தின் உயர் அதிகாரி ஒருவருக்கு எதிராகப் புகார்கள் முன்வைக்கப்படும் போது, அவருக்கு எதிரான சாட்சியங்களின் சுருக்கத்தைத் திரட்டி அதனை முதலில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டியது சபாநாயகரின் பொறுப்பாகும் என்றும், ஆனால் தற்போதைய விடயத்தில் அது இடம்பெறவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

அத்துடன், குறித்த அதிகாரிக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமலும், அவரிடம் விளக்கம் கோரப்படாமலும் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது சட்டவிரோதமானது என அவர் தெரிவித்தார்.

சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை அடிப்படையாகக் கொண்டு ஒருபோதும் இவ்வாறான தீர்மானங்களை எடுக்க முடியாது என வலியுறுத்திய அவர், குறித்த அதிகாரிக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

தற்போதைய சபாநாயகர் புதியவர் என்பதால், சபையில் நீண்டகாலம் பணியாற்றிய அனுபவமிக்க அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் அவருக்கு இந்த மரபுகள் குறித்துத் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும் எனத் தெரிவித்த லக்ஷ்மன் கிரியெல்ல, ஊழியர் ஆலோசனைக் குழுவிற்கு (Staff Advisory Committee) அதிகாரிகளை நீக்கும் அதிகாரம் கிடையாது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

சட்டங்களை உருவாக்கும் உன்னத இடமான நாடாளுமன்றத்திலேயே இவ்வாறான மரபு மீறல்கள் இடம்பெறுவது சர்வதேச ரீதியில் நாட்டுக்குப் பெரும் அவப்பெயரை ஏற்படுத்தும் என எச்சரித்த அவர், நாடாளுமன்றத்தின் கௌரவத்தையும் உயர் பதவிகளையும் பாதுகாக்க வேண்டியது சபாநாயகர் மற்றும் அரசாங்கத்தின் தார்மீகப் பொறுப்பாகும் எனத் தெரிவித்து தனது உரையை நிறைவு செய்தார்.

Related posts

ரணில் விக்ரமசிங்க என்ற பெருந்தலைவரை வீழ்த்த முடியாது –ரணில் அமோக வெற்றிபெறுவார் : ஹரின்

குழந்தைகளின் வாகனத்தில் ஏறிய கெஹலியவால் சர்ச்சை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து பவித்ரா உள்ளிட்ட மூவர் நீக்கம்

editor