பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வல விபத்தின் போது மது அருந்தியிருக்கவில்லை என உறுதியாகியுள்ளது.
அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
அவரது இரத்த மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நிலையில், அவர் விபத்தின் போது மது அருந்தியமைக்கான எவ்வித சான்றும் உறுதியாகவில்லை என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வல, தான் செலுத்திய ஜீப் வண்டியில் மோதி காயமடைந்தவர்களுக்கு அனுதாபக் கொடுப்பனவாக பணம் வழங்க விரும்புவதாகத் தமது சட்டத்தரணிகள் ஊடாக இன்று நீதிமன்றத்திற்குத் அறிவித்த போதிலும், காயமடைந்த தரப்பினர் அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவின் சாரதி அனுமதிப்பத்திரத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு மஹர மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வல செலுத்திய ஜீப் வண்டி, டிசம்பர் 11ஆம் திகதி சப்புகஸ்கந்த பகுதியில் மற்றுமொரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
சம்பவம் தொடர்பான வழக்கு, இன்று மஹர இலக்கம் 02 மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் குழு, ரன்வல இன்னமும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து பிரிவின் 76 வது விடுதியில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவித்து வைத்திய அறிக்கைகளைச் சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
