பாராளுமன்றத்தை ஒக்டோபர் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
பாராளுமன்றம் கூடும் ஒவ்வொரு நாளும், மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.00 மணி முதல் பி.ப 5.00 மணிவரை தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழான 2446/34 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. பி.ப 5 மணியளவில் ஏற்கனவே இரண்டாவது மதிப்பீடுக்கு உட்படுத்தப்பட்ட தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புத் (திருத்தச்) சட்டமூலம் குழுநிலையில் ஆராயப்பட்டு மூன்றாவது மதிப்பீடு இடம்பெறும்.
இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 22ஆம் திகதி புதன்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 4.30மணி வரை விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் 2451/10 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட கட்டளை மற்றும் (52ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான விதிகள் என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
அன்றையதினம் பி.ப 4.30மணி முதல் பி.ப 5.30 மணிவரை அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 23ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்படட குற்றங்களை ஒழிப்பதற்கான ஒரு தேசிய வேலைத்திட்டம் மற்றும் சட்டரீதியான கட்டமைப்பை வலுப்படுத்துதல் குறித்து அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.00 மணி முதல் பி.ப 5.00 மணிவரை மறைந்த முன்னாள் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான லொஹான் ரத்வத்தே, ஹீன்மஹத்மயா லியனகே, டிக்ஸன் ஜே. பெரேரா, (கலாநிதி) மேர்வின் டீ. த சில்வா, வை.ஜீ. பத்மசிரி, ஆர்.எம்.ஆர் சூல பண்டார, மாணிக்கவாசகர் கனகசபாபதி ஈழவேந்தன் ஆகியோர் தொடர்பான அனுதாபப் பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.