இலங்கையில் தொழில்யின்மை என்பது ஒட்டுமொத்த சமூகத்திலும் போலவே பொருளாதாரத்திலும் கூட கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு விடயமாக அமைந்து காணப்படுகின்றது.
கல்வித் தகுதிகளோடு உயர் மட்ட திறன்களையும் கொண்ட இளைஞர் யுவதிகள், தொழில் இல்லாமல் இருப்பது அவர்களினது எதிர்காலத்திலும் போலவே நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு விடயமாக மாறியுள்ளது.
தொழிலின்மையால் இளைஞர் யுவதிகள் சட்டவிரோத நடவடிக்கைகள், குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருட்கள் சார் நடவடிக்கைகளுக்கு மாறுகின்ற எண்ணிக்கையையும் அதிகரித்து வருவதால், வேலையில்லா நிலையை குறைப்பதற்கு சகல அரசாங்கங்களும் முன்னுரிமை செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இதன் பிரகாரம் பின்வரும் கேள்விகளை முன்வைக்கின்றேன். இவற்றுக்கு குறிப்பிட்ட பதில்களையும் விளக்கங்கையும் எதிர்பார்க்கின்றேன்.
இலங்கையில் தற்போதைய வேலையின்மை விகிதம் யாது ? என்பதையும், க.பொ.த. சாதாரண தர, உயர்தர/பட்டதாரிகள் போன்ற கல்வித் தகுதிகளின்படி அதன் எண்ணிக்கையிலான பரவல் யாது என்பதையும்? வேலையின்மை சமூகத்தில் ஒரு பேரழிவை ஏற்படுத்தும் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறதா ?
வேலையில்லா நிலையைக் குறைப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் யாவை ?
இதைக் குறைப்பது ஒட்டுமொத்த பொருளாதார இலக்காகக் கருதப்படலாம் என்பதால், 2025, 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் வேலையின்மையைக் குறைப்பதற்கு ஒவ்வொரு ஆண்டுக்கும் அரசாங்கம் எதிர்பார்க்கும் சதவீத இலக்குகள் யாவை ?
தற்போதைய அரசாங்கத்தின் “வளமான நாடு, அழகான வாழ்க்கை” என்ற கொள்கை அறிக்கையிலும் சுமார் 40,000 பட்டதாரிகள் வேலையில்லாமல் இருப்பதாகவும், 20,000 பேரை ஆசிரியர் தொழிலுக்கும், 3,000 STEM பட்டதாரிகள் மற்றும் 9,000 STEM அல்லாத பட்டதாரிகள் தகவல் தொழிநுட்ப துறையிலும், மேலும் 3000 பேர் ஏனைய துறைகளிலுமாக தொழிலுக்கு உள்ளீர்க்கப்படுவர் என குறிப்பிடப்பட்டுள்ளன.
இதன் பிரகாரம் உள்ளீர்ப்பைச் செய்ய எதிர்பார்க்கும் காலம் யாது?
இதனை இன்னும் முன்னெடுக்காமை கடும் பிரச்சினையை எழுப்பியுள்ளது.
பிரதமரின் அறிக்கையொன்றின் படி, பட்டதாரிகள் துறையில் 50,000 தொழில் வெற்றிடங்கள் காணப்படுவதனால், இந்த 35,000 பேருக்கும், ஆசிரியர்களாக பணி புரிந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் ஆசிரியர் தொழிலில் வேலை வழங்கலாம்.
ஆனபடியால், இந்த விடயத்தை விரைந்து மேற்கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கோரிக்கை விடுத்தார்.