2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் மூன்றாவது நாளான இன்று (18) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு அமைச்சுக்கான செலவுத்தலைப்பு (103) 92 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
குழு நிலை விவாதத்தின் பின்னர் பி.ப 6.50 மணியளவில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறித்த செலவுத்தலைப்புக்கு வாக்கெடுப்பைக் கோரினார்.
இதற்கமைய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் குறித்த செலவுத்தலைப்புக்கான ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக 101 வாக்குகளும், எதிராக 09 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அத்துடன், இன்றையதினம் குழு நிலை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கான செலவுத்தலைப்புக்கு (225) வாக்கெடுப்பை நடத்துமாறு அகில இலங்கை தமிழ் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்தார்.
இதற்கமைய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் குறித்த செலவுத் தலைப்புக்கான ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக 100 வாக்குகளும், எதிராக 02 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
