பாடசாலை நேரத்தை மேலும் அரை மணி நேரம் நீடிக்கும் முடிவை தொழிற்சங்கங்கள் உட்பட தொடர்புடைய அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்னரே எடுக்கப்பட்டதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மாற்றங்களைச் செய்யும் போது வெவ்வேறு கருத்துகள் வெளிப்படுவது சாதாரணமானது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் எந்தவொரு ஆய்வையும் நடத்தாமல் பாடசாலை நேரத்தை நீடிக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக அதிபர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த முடிவுக்கான காரணங்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய சங்கத்தின் பொதுச் செயலாளர் நிமல் முதுங்கொடுவ தெரிவித்துள்ளார்.
இந்த முடிவு தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடல்களில் இதுவரை எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்று அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் வண. யல்வெல பன்னசேகர தேரர் கூறினார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, பாடசாலை நேரத்தை அதிகரிக்கும் முடிவு குறித்து குளியாப்பிட்டியவில் ஊடகங்களுக்குப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பின்வருமாறு கருத்து வௌியிட்டார்.
“இந்த வருடம் முழுவதும் நாங்கள் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடினோம்.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுடனும் உரையாடினோம். அதன் விளைவாகவே பாடசாலை நேரத்தை அரை மணிநேரமாக அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.
சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு, அமைச்சு இது குறித்து ஒரு சுற்றறிக்கையையும் வெளியிட்டது.
இதை எப்படிச் செயல்படுத்துவது என்பது குறித்து ஒரு மாதிரி கால அட்டவணை அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதுபோன்ற மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் போது வெவ்வேறு கருத்துகள் வருவது பொதுவானதாகும்.
இதைச் செயல்படுத்த முடியாது என்பதற்கு அடிமட்ட அளவில் அதிக எதிர்ப்பு இருப்பதாக நான் காணவில்லை’ என தெரிவித்துள்ளார்.
