பள்ளிவாசல் சொத்துக்கள் சிலரது பரம்பரைச் சொத்துக்களாக மாறுவதைத் தடுக்க வேண்டும் எனவும், முறைகேடுகளைக் களைய திணைக்களம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் தெரிவித்தார்.
மல்வானை ரக்ஸபான ஜூம்ஆ பள்ளிவாசலில் நேற்று (17) புனித மிஃராஜ் தினத்தை முன்னிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சரும், கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அஷ்ஷேக் முனீர் முலப்பர் இதனைத் தெரிவித்தார்.
இந்த உரையின் போது, மிஃராஜ் பயணம் என்பது நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட கவலைக்குரிய காலப்பகுதியில் அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட ஒரு ஆறுதல் பயணம் என அவர் சுட்டிக்காட்டினார்.
அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில்,
கடுமையான சவால்களின் போது எவ்வாறு பொறுமையைக் கையாள்வது மற்றும் தொழுகையின் ஊடாக இறைவனுடனான தொடர்பை பலப்படுத்தி சவால்களை எதிர்கொள்வது போன்ற படிப்பினைகளை இந்த நிகழ்வு சமூகத்திற்கு வழங்குகிறது.
மேலும், நபி (ஸல்) அவர்கள் ஏனைய நபிமார்களுக்கு தலைமைத்துவம் வழங்கிய நிகழ்வு, சமூகம் எப்போதும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது என்றார்.
பள்ளிவாசல் நிர்வாகங்கள் குறித்து கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர்,
இன்று பல பள்ளிவாசல்களில் நிர்வாகச் சபைப் போட்டிகள் காரணமாக சொத்துக்கள் அநியாயமாக வீணடிக்கப்படுவதாகவும், பல விவகாரங்கள் நீதிமன்றம் வரை செல்வதாகவும் கவலை வெளியிட்டார்.
இறைவனின் இல்லத்தை நிர்வகிப்பவர்கள் விட்டுக்கொடுப்புடன் செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டதோடு, பள்ளிவாசல் சொத்துக்கள் சிலரது பரம்பரைச் சொத்துக்கள் போல கையாளப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், முறையான வாடகை ஒப்பந்தங்கள் இன்றி குறைந்த விலைக்கு கடைகள் வழங்கப்படுவதால் இறைவனின் இல்லத்திற்குச் சேர வேண்டிய வருமானம் பாதிக்கப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு உதாரணமாக, ஒரு மாவட்டத்தில் 35,000 ரூபா வாடகைக்கு விடப்பட்டிருந்த கடை, புதிய மதிப்பீட்டின் படி 190,000 ரூபாவிற்கு வாடகைக்கு எடுக்க முன்வந்த சம்பவத்தை அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான முறைகேடுகளைத் தடுக்க, முஸ்லிம் சமய பண்பாட்டுக் திணைக்களம் தற்போது அனைத்து பள்ளிவாசல்களினதும் சொத்து விபரங்கள் மற்றும் வாடகை ஒப்பந்தங்கள் குறித்த தரவுகளைத் திரட்டி வருவதாகவும், இந்தச் சொத்துக்களை முறையாகக் கையாண்டு பள்ளிவாசல்களின் மேம்பாட்டிற்குப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இறுதியாக, சமூகம் தனது உள்வீட்டுப் பிரச்சினைகளைத் தாண்டி நாட்டின் கல்வி மற்றும் பொருளாதார ரீதியான பொதுப் பிரச்சினைகளை எதிர்கொள்வது குறித்துச் சிந்திக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், உலகில் அநீதிக்கு உள்ளாக்கப்படும் மக்களுக்காகவும், குறிப்பாக புனித தலங்களின் விடுதலைக்காகவும் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் மற்றும் பிரார்த்திக்க வேண்டும் என அவர் தனது உரையில் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, ஜம்இய்யதுல் உலமா கொழும்பு கிளை பிரதி தலைவர் அஷ்ஷேக் அப்துல்லாஹ் பாயிஸ் விசேட பயான் நிகழ்த்தினார்.
நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தயாரிப்பாளர் இஸ்பஹான் சாப்தீன் வழிகாட்டலில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (SLBC) முஸ்லிம் சேவையில் நேரடியாக இரவு 8.00 – 9.00 மணிவரை இடம்பெற்ற இந்நிகழ்வை பௌசான் அப்துல் ஹமீத் தொகுத்து வழங்கியிருந்தார்.
இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் மற்றும் பணிப்பாளர் ஆகியோருக்கு நினைவுச் சின்னங்களை பள்ளிவாசல் நிர்வாகம் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
