ஐக்கிய இராச்சியத்தைத் தொடர்ந்து, கனடாவும் அவுஸ்திரேலியாவும் பலஸ்தீன அரசுக்கான அங்கீகாரத்தை வழங்க முன்வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
இங்கிலாந்து பிரதமர் Keir Starmer, கனடாவின் பிரதமர் Mark Carney, அவுஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese ஆகியோர் இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
இந்த நகர்வானது, நீண்டகாலமாகப் பலஸ்தீனர்களுக்கு ஒரு சுதந்திரமான நாடு என்ற அங்கீகாரத்தை வலியுறுத்தி வரும் சர்வதேச சமூகத்தின் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று (21) காலை முதல் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 55 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் காசா நகரில் மாத்திரம் 37 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அல் ஜஸீரா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, பிரித்தானிய பிரதமர் அண்மையில் பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதாக அறிவித்த ஒரு சில நாட்களைத் தொடர்ந்து, கனடாவும் அவுஸ்திரேலியாவும் இதே போன்றதொரு நிலைப்பாட்டை எடுத்துள்ளன.
இது மத்திய கிழக்கு அரசியல் களத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்மென அவதானிகள் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளது.
ஆயினும் ஹமாஸிற்கு பலஸ்தீனத்தில் எந்தவொரு பங்கும் இருக்கக்கூடாது என அவுஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது.
பலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் இந்த நாடுகள், இரு அரசு தீர்வு (Two-State Solution) தொடர்பில் தமது உறுதியான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.
இந்த நாடுகள் எடுத்த முடிவானது, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் பலஸ்தீன அரசுக்கான அங்கீகாரத்தை வலுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இஸ்ரேல் இந்த நகர்வுகளை வன்மையாகக் கண்டித்துள்ளதுடன், இது பிராந்திய அமைதிக்கு உகந்தது அல்ல எனத் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் அதிகரித்து வரும் பலஸ்தீன நாட்டுக்கான அங்கீகாரம், இஸ்ரேல் – பலஸ்தீன மோதலில் புதிய சவால்களையும், அதேவேளை தீர்வுக்கான புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையிலும் இந்த சர்வதேச மாற்றங்கள் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருகின்றன.
பலஸ்தீனப் பிரச்சினைக்கு அமைதியான தீர்வைக் காண்பதற்கும், இரு நாடுகள் தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கும் ஆதரவளிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பலஸ்தீனத்திற்கு ஆதவான தீர்மானத்திற்கு இலங்கை அண்மையில் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலுக்கும் பலஸ்தீனியர்களுக்கும் இடையிலான இரு நாடுகள் தீர்வுக்கான ‘உறுதியான, காலவரையறையுடன் கூடிய மற்றும் மீளமுடியாத நடவடிக்கைகளை’ சுட்டிக் காட்டும் பிரகடனம் கடந்த செப்டெம்பர் 12ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றபட்டது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்த வாக்களிப்பை புறக்கணித்த நிலையில், இந்த பிரகடனத்தை அங்கீகரிக்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக 142 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் பதிவானது, அதேவேளை 12 நாடுகள் வாக்களிப்பிலிருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
