செப்டெம்பரில் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்திற்கு முன்னர், பலஸ்தீனை தனி நாடாக அங்கீகரிக்கும், பிரிட்டன் பிரதமரின் தீர்மானத்தை வரவேற்பதாக பாராளுமன்ற உறுப்பினர் உமா குமரன் தெரிவித்துள்ளார்.
அரசியலில் தீவிரமாக இருந்த காலம் முதல் பலஸ்தீனை ஆதரித்து வருவதாகத் தெரிவித்துள்ள அவர், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இது குறித்த கருத்துக்களை பதிவிட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:
பலஸ்தீனை தனி நாடாக அங்கீகரிக்குமாறு ஒரு வருடத்துக்கும் மேலாக குரல் கொடுத்து வருகிறேன்.
இது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மற்றும் ஆழமான அர்த்தமுள்ள நடவடிக்கையாகும்.
இஸ்ரேலியர்களுடன் சேர்ந்து பலஸ்தீனியர்களின் சுய நிர்ணய உரிமையை உறுதிப்படுத்தும் இரு நாடுகள் தீர்வுக்கான பிரிட்டனின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறேன்.
இஸ்ரேலிய அரசாங்கத்தின் முற்றுகையால் காஸாவில் பட்டினியால் வாடுவோர் அதிகரித்து வருகின்றனர்.
காஸா எல்லையில் ஆயிரக்கணக்கிலான உதவிகள் காத்திருக்கின்றன. காஸாவுக்கு உயிர்காக்கும் உதவிகளை வழங்க பிரித்தானியா தயாராக உள்ளது.
அரை மில்லியன் பவுண்கள் மதிப்புள்ள முக்கிய உயிர்காக்கும் பொருட்கள் ஏற்கனவே காஸாவுக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.
மேற்குக் கரையில் போர் நிறுத்தம், பணயக் கைதிகள் பரிமாற்றம் உள்ளிட்ட சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இது ஒரு முக்கியமான படியாகும். ஆனால் கொடூரமான மற்றும் சகிக்க முடியாத வன்முறை சுழற்சியை முடிவுக்குக் கொண்டுவருவதிலிருந்து நாம் இன்னும் வெகு தொலைவில் இருக்கிறோம்.
பலஸ்தீன மற்றும் இஸ்ரேலிய மக்கள் இருவருக்கும் ஒரு நியாயமான மற்றும் நீடித்த அமைதியை அடைவதற்கு மேலும் விரைவான நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுக்க என்னால் முடிந்தளவு குரல் கொடுப்பேன்.