பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அறிவித்தலை விடுத்துள்ளது.
சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக ஹம்பாந்தோட்டை வரையிலும் உள்ள கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை இன்று (28) பிற்பகல் 12.30 மணி முதல் நாளை (29) பிற்பகல் 12.30 மணி வரை செல்லுபடியாகும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் காரணமாக, சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 60-70 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், இந்தக் கடல் பகுதிகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.
இதே நேரத்தில், சிலாபம் முதல் கொழும்பு வழியாக காலி வரையிலும், காங்கேசன்துறை முதல் முல்லைத்தீவு வழியாக திருகோணமலை வரையிலும் உள்ள கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 50-60 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் என்றும், அந்தக் கடல் பகுதிகள் சில நேரங்களில் கொந்தளிப்பாகக் கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, அந்தக் கடல் பகுதிகள் குறித்து மீன்பிடி மற்றும் கடல்சார் சமூகத்தினர் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மன்னார் முதல் புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளில் அலைகளின் உயரம் சுமார் 2.5 – 3.0 மீட்டர் வரை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
மன்னார் முதல் புத்தளம், கொழும்பு ஊடாக காலி வரையான கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் நிலத்தை அடையும் வாய்ப்பும் உள்ளது.
மறு அறிவிப்பு வரும் வரை இந்தக் கடல் பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என மீன்பிடி மற்றும் கடல்சார் சமூகத்தினருக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.