உலகம்

பற்றி எரிகிறது காசா – இஸ்ரேலின் தரை வழி நடவடிக்கை ஆரம்பம்

‘ஒப்பந்தம் ஒன்றுக்கு வருவதற்கு ஹமாஸ் அமைப்புக்கு மிகக் குறுகிய காலமே இருப்பதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்க் ருபியோ எச்சரித்திருக்கும் நிலையில், இஸ்ரேலியப் படை காசா நகரில் தரைவழி தாக்குதலை ஆரம்பித்திருப்பதாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி அமெரிக்க செய்தி நிறுவனங்களான சி.என்.என். மற்றும் எக்சியோஸ் குறிப்பிட்டுள்ளன.

காசா பகுதியின் மிகப்பெரிய நகரான காசா நகரின் மீது இஸ்ரேலியப் படை சில வாரங்களாக உக்கிர தாக்குதலை நடத்தி வரும் நிலையிலேயே அந்த நகரை முழுமையாக கைப்பற்றுவதற்கு படையினர் முன்னேறி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

இஸ்ரேலிய தரைப் படை காசா நகருக்கு நுழைந்திருப்பதாக அந்த இராணுவம் உறுதி செய்துள்ளது. எதிர்வரும் நாட்களில் முன்னேறும் படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது.

காசா நகரை கைப்பற்றுவதற்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த மாதம் இராணுவத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.

அந்த நகரை ஹமாஸ் அமைப்பின் கோட்டை என்றும் இஸ்ரேல் கூறி வருகிறது.

இதனைத் தொடர்ந்து காசா நகரின் புறநகரங்களில் இஸ்ரேலியப் இராணுவம் தனது படை நடவடிக்கையை தீவிரப்படுத்தி இருந்தது. அந்த நகரின் மையப்பகுதியை இராணுவம் நெருங்கியுள்ளது.

எனினும் காசா நகரில் சுமார் ஒரு மில்லியன் மக்கள் வசிப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ராயேல் காட்ஸ் ட்விட்டரில் நேற்று காலை வெளியிட்ட பதிவில் ‘காசா பற்றி எரிகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

‘பங்கரவதாக கட்டமைப்பில் இஸ்ரேலிய படை இரும்புக் கரம் கொண்டு தாக்குதல்களை நடத்துவதோடு பணயக்கைதிகளை விடுவிப்பது மற்றும் ஹமாஸை வீழ்த்தும் நிபந்தனைகளுக்காக படையினர் தைரியமாக போராடுகின்றனர்’ என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் காட்சின் கருத்து இஸ்ரேலிய படையின் தரை வழி நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடப்பட்டதா என்பது குறித்து உறுதி செய்யப்படவில்லை.

ஏற்கனவே காசாவில் 75 வீதத்துக்கும் அதிகமான பகுதிகளை இஸ்ரேலிய படை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்திருக்கும் சூழலில் இஸ்ரேலுக்கு விரைந்த ருபியோ, இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் உறுதியான ஆதரவு இருப்பதாகவும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையே உடன்பாடு ஒன்றை எட்டுவதற்கு மிகக் குறுகிய கால அவகாசமே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவை கடந்த திங்கட்கிழமை சந்தித்த பின்னர் பேசிய ருபியோ, அமைதி உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கு மாதங்கள் அன்றி ‘சில நாட்கள் மற்றும் வாரங்களே’ அவகாசம் உள்ளது என்று குறிப்பிட்டார்.

இராஜதந்திர முயற்சிகளுக்கான சாத்தியம் தொடர்பில் அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘ஹமாஸ் ஆயுதத்தை கைவிட்டு, பணயக்கைதிகளை விடுவிப்பதை அமெரிக்கா விரும்புகின்றபோதும், ஒரு ‘குறுகிய இராணுவ நடவடிக்கை’ அந்தக் குழுவை ஒழிப்பதற்கு போதுமானதாக இருக்கலாம்’ என்று பதில் அளித்துள்ளார்.

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் நேற்று காலை தொடக்கம் அங்கு குறைந்தது 52 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக காசா மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காசாவில் நேற்றுக் காலை தொடக்கம் குறைந்தது 62 பேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த திங்கள் இரவில் ஏவுகணைகள் மூலம் தாக்கி காசா நகரில் மேலும் இரு அடிக்குமாடி கட்டடங்களை இஸ்ரேலியப் படை தகர்த்தது. ‘குடியிருப்பு கோபுரங்கள், பள்ளிவாசல்கள், பாடசாலைகள் மற்றும் வீதிகள் அனைத்தையும் அவர்கள் அழித்து வருகிறார்கள்’ என்று காசா குடியிருப்பாளரான 70 வயது அபூ டமர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

‘எமது ஞாபகங்களை அவர்கள் அழித்து வருகிறார்கள்’ என்றும் அவர் தெரிவத்தார்.

Related posts

காசாவிற்கு கை கொடுக்கு மலேசியா!

48 மணி நேரத்திற்குள் வெளியேறுங்கள் : மலேசிய அரசு உத்தரவு

தாய்லாந்திலும் கொரோனா தொற்றின் ஆதிக்கம்