ஹமாஸ் இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிப்பதற்கு முன்னதாக, இஸ்ரேலின் டெல் அவிவில் இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடியுள்ளனர்.
கூட்டத்தினரிடையே உரையாற்றிய அமெரிக்க விசேட தூதுவர் ஸ்டீவ் விட்கொஃப், பணயக்கைதிகள் “வீட்டுக்குத் திரும்பி வருகிறார்கள்” என்று தெரிவித்தார்.
அத்துடன் காசா போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை திருப்பி அனுப்பும் ஒப்பந்தத்தை சாத்தியமாக்கியதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை அவர் பாராட்டினார்.
காசாவில், இஸ்ரேலிய துருப்புக்கள் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களில் சுமார் 500,000 பேர் வடக்கு காசாவிற்குத் திரும்பியுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்ய எதிர்வரும் திங்கட்கிழமை ஒரு உச்சிமாநாட்டை நடத்தவுள்ளதாக எகிப்து உறுதிப்படுத்தியது.
ஷார்ம் எல்-ஷேக்கில் நடைபெறும் உச்சிமாநாட்டில் ட்ரம்ப் உட்பட 20க்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எகிப்திய ஜனாதிபதி பேச்சாளர் தெரிவித்தார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் மற்றும் பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோரும் திங்கட்கிழமை எகிப்துக்கு பயணம் செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை ட்ரம்ப் எகிப்துக்குச் செல்வதற்கு முன்பு நாளை இஸ்ரேலுக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.