பங்களாதேஷில் பாடசாலை ஒன்றின் மீது போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27-ஆக உயர்வடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நேற்று(21) மதியம் 1 மணிக்கு அந்த நாட்டின் விமான படை விமானம் F-7 BGI பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.
உத்தரா என்ற இடத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த போது விமானம் மைல்ஸ்டோன் பாடசாலை மற்றும் கல்லூரி வளாகத்தில் நொறுங்கி விழுந்து தீப்பற்றி எரிந்தது.
விமான விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர், பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
தீயணைப்பு படையினர் கடுமையாக போராடி தீயை அணைத்த நிலையில் பங்களாதேஷ் தீயணைப்பு துறையின் இயக்குனர் ஜெனரல் சாகீத் கமால் கூறுகையில், ‘விமானம் நொறுங்கி விழுந்த இடத்தில் 27 உடல்களை மீட்பு படையினர் மீட்டுள்ளனர்.
பலியானவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள், ஆசிரியர்கள் என்றும் தீக்காயம் மற்றும் ஏனைய காயங்கள் ஏற்பட்டதில் 170 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதோடு, இதில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிக மோசமான விமானப் பேரழிவை அண்டை நாடான இந்தியா எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.