நேபாளத்தில் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களால், சுமார் 19 பேர் கொல்லப்பட்டதையடுத்து, சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள பாராளுமன்றக் கட்டிடத்திற்குள் நேற்றையதினம் (08) ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நுழைந்து, பேஸ்புக் மற்றும் யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு மீதான தடையை நீக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை, அங்கு இடம்பெறும் ஊழலை எதிர்த்துப் போராடவும் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஜெனரல் இசட்டின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதற்காக நேற்று இரவு அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் தடையை நீக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அந்த நாட்டு தகவல் தொடர்பு மற்றும் தகவல் அமைச்சர் பிருத்வி சுப்பா குருங் கருத்து வெளியிட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நேபாளத்தின் தலைநகரிலும், தலைநகருக்கு வெளியிலுள்ள நகரங்களிலும் இடம்பெற்ற போராட்டங்களில் 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.