நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து அரசை எதிர்த்து இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
நேபாளத்தில் ஆன்லைன் தளங்களை ஒழுங்குபடுத்தவும், தேவையற்ற உள்ளீடுகளை கண்காணிக்கவும் அந்நாட்டு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி புதிய விதிமுறைகளை அரசு வெளியிட்டு இருந்தது.
இதன்படி சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்களை பதிவு செய்ய அந்நாட்டு அரசு ஏழு நாள் அவகாசம் வழங்கியிருந்தது.
அவகாசம் முடிவடைந்தும், பேஸ்புக், வாட்ஸாப், இன்ஸ்டாகிராம், யு டியூப், எக்ஸ், லிங்க்டுஇன் உள்ளிட்ட நிறுவனங்கள் பதிவு செய்யவில்லை.
இதையடுத்து இவற்றை முடக்கி, நேபாளத்தின் தொலைத்தொடர்பு ஆணையத்துக்கு அந்நாட்டு தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவை முடக்கப்பட்டுள்ளன.
செய்தி, பொழுது போக்கு மற்றும் வர்த்தகம் ஆகிய காரணங்களுக்காக பயனர்கள் பெரிதும் சார்ந்து இருந்த இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்நாப்சாட் ஆகியவையும் முடக்கப்பட்டன.
இதற்கு அந்நாட்டில் விமர்சனம் எழுந்தது. குறிப்பாக ஜென் இசட் எனப்படும் 2003ம் ஆண்டுக்கு பிறகு பிறந்த இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தடையை நீக்க வேண்டும். ஊழல் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
அரசின் நடவடிக்கையை கண்டித்து அந்நாட்டின் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதயைனடுத்து தெருக்களில் ஒன்று கூடுவதற்கு அரசு தடை விதித்தது.
இருப்பினும் தடையை மீறி போராட்டம் நடைபெற்று வருகிறது. பார்லிமென்டில் தடை செய்யப்பட்ட பகுதிகளிலும் போராட்டக்காரர்கள் புகுந்தனர்.
பாதுகாப்புக்காக போலீசாருடன் ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டனர். பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
அதற்கு எந்த பலனும் ஏற்பட்டதாக தெரியவில்லை. மரக்கட்டைகளையும், தண்ணீர் பாட்டீல்களையும் போலீசார் மீது வீசியதுடன், அரசுக்கு எதிராக கோஷம் போட்டனர்.
போராட்டத்தை கலைக்க ரப்பர் வெடிகுண்டு, கண்ணீர் புகை குண்டுகளை, தண்ணீரை பீய்ச்சி அடித்தும் பாதுகாப்பு படையினர் அவர்களை விரட்ட முயன்றனர்.
தடியடியும் நடத்தினர். இந்த மோதலில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
