கேகாலை மாவட்டத்தில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து தீர்வுகளை வழங்குவதற்குமான விசேட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நேற்று முன்தினம் (01) கேகாலை மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அதன்படி, கேகாலை மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்துத்துறையின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்காக கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நந்தன மில்லகல தலைமையில் போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், போக்குவரத்து சிரமங்கள் உள்ள அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய வீதிகள், இலாபம் இல்லாததால் பஸ் சேவைகள் இயங்கப்படாத வீதிகள், கடந்த வருடங்களில் பல்வேறு காரணங்களால் பஸ் சேவைகள் இயங்கப்படாத வீதிகள், பாதுகாப்பற்ற ரயில்வே கடவைகள், வீதி சமிக்ஞைகள் தேவைப்படும் இடங்கள், ரயில் நிலையத்துடன் தொடர்புடைய அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய ஏனைய சேவைகள், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவை நிலையங்களின் சேவைத் தேவைகள், தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் பிரச்சினைகள், டிப்போக்களில் உள்ள பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
2025-2026 ஆம் ஆண்டிற்கான வீதிப் பாதுகாப்புத் திட்டத்தைத் தயாரிப்பதன் அவசியம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
கேகாலை மாவட்டத்தில் நவீனமயமாக்கப்பட வேண்டிய ரயில் நிலையமாக ரம்புக்கனை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதற்கான விரைவான நடவடிக்கைகளை எடுக்குமாறு உரிய பிரிவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.
அத்துடன், கேகாலை மாவட்டத்தில் வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக இந்த ஆண்டு பெறப்பட்ட ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக 250 மில்லியன் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.
மேற்படி கூட்டத்தில், சப்ரகமுவ மாகாண ஆளுநரும் கேகாலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான சம்பா ஜானகி ராஜரத்ன, சுற்றாடல் அமைச்சரும் கேகாலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான தம்மிக்க பட்டபந்தி மற்றும் கேகாலை மாவட்ட செயலாளர், சப்ரகமுவ மாகாண பிரதம செயலாளர் உட்பட அமைச்சுக்களின் செயலாளர்கள், அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் அரசியல்வாதிகள் அரச அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் தொடர்பான அரச நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்