ஹட்டன் நகருக்கு நீர் வழங்கும் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் விழுந்து காணாமல் போன பாடசாலை மாணவனின் சடலம் ரங்கல கடற்படையின் சுழியோடிகளால் இன்று (09) மதியம் மீட்கப்பட்டது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவன் கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் கல்வி கற்கும் 17 வயது ராம் மூர்த்தி தமிழ் மாறன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சையை முடித்துவிட்டு, தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருந்த குறித்த மாணவன் சக பாடசாலை மாணவர்களுடன், கணினி வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறி, ஹட்டனில் உள்ள சிங்கமலை நீர்த்தேக்கத்திற்கு புகைப்படம் எடுக்க சென்றுள்ளார்.
பின்னர் குறித்த மாணவர் அட்டை கடிக்குள்ளானதால் காலில் காயம் ஏற்பட்டதாகவும், இரத்தத்தை கழுவ நீர்த்தேக்கத்தில் இருந்த பாறையில் ஏறி இரத்தத்தை கழுவி கொண்டிருந்த வேலையிலேயே அம் மாணவன் நீர்தேக்கதில் விழுந்துள்ளதாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாணவனின் பெற்றோர் வெளிநாடு சென்றுள்ளதாகவும், மீட்கப்பட்ட மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு சிறப்பு தடயவியல் நிபுணரிடம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், மேலும் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
-கிரிஷாந்தன்