பாராளுமன்றத்தின் பொதுமனுக்கள் பற்றிய குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் காலதாமதங்கள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் பாராளுமன்ற குழுக்களின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாமை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அதிகாரிகளை அழைத்திருந்தது.
கடந்த 13ஆம் திகதி இந்தக் குழு அதன் தலைவர் கௌரவ நீதி அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷன நாணயக்கார அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே அமைச்சின் அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.
இதற்கமைய, குழுக்களினால் வழங்கப்படும் சில பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோன்று, சில பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குழுவில் எடுத்துக் கூறினர்.
இருப்பினும், சில பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் போது எழும் சிக்கல்கள் குறித்து மனுதாரரின் கருத்துகளையும் பெற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது, அதன்படி, மனுதாரர்களை வேறொரு திகதியில் குழு முன்னிலையில் அழைப்பதற்கும் முடிவுசெய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர் (சட்டத்தரணி) சுனில் வட்டகல, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) அஜித் பி.பெரேரா, ரவி கருணாநாயக்க மற்றும் ஒஷானி உமங்கா ஆகியோர் கலந்துகொண்டனர்.
