2019 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் சிறிகொத்த கட்சி தலைமையகத்தை புதுப்பிக்க அரச பொறியியல் கூட்டுத்தாபன ஊழியர்களையும் சொத்துகளையும் பயன்படுத்தி அரசாங்கத்துக்கு 1.6 மில்லியனுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் நிலு தில்ஹார விஜயதாசவை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு கைது செய்தது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் நிலு தில்ஹார விஜயதாசவை கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி, சந்தேக நபரை தலா ஒரு மில்லியன் ரூபா மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கவும், சந்தேக நபருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கவும் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டார்.
சாட்சிகளை செல்வாக்கு செலுத்துவதைத் தவிர்க்குமாறு சந்தேக நபருக்கு நிபந்தனை விதித்த நீதவான், பின்னர் வழக்கை டிசம்பர் (09) அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டார்.