நிந்தவூர் பிரதேச சபையின் பதில் தவிசாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் சமீம் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி நிந்தவூர் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்ட நிலையில் கிடைக்கப் பெற்ற ஒரு ஆசனத்தை நம்பிக்கை அடிப்படையில் சட்டத்தரணி எம் ஐ.இர்பான் அவர்களுக்கு தான் வழங்கிய போதும் கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக சட்டத்தரணி இர்பான் செயற்பட்டதன் மூலம் கட்சியின் கட்டுக்கோப்பான கட்டமைப்பை மீறியுள்ளார்.
அத்தோடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸோடு இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக இணக்கப்பாடு எட்டப்பட்ட நிலையில் அதற்கெதிராக கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் இர்பான் செயற்பட்டதானது கட்சியை பலவீனப் படுத்துவதோடு பெரும் சங்கடங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே பொத்துவில் தொகுதி அமைப்பாளர் என்ற ரீதியில் நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர் எம்.ஐ.இரபான் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் சமீம் மேலும் தெரிவித்தார்.
