உள்நாடு

நாரஹேன்பிட்டி புகையிரத நிலையத்தை நவீனமயப்படுத்தும் திட்டம் ஆரம்பம்

“Clean Sri Lanka” வேலைத்திட்டத்துடன் இணைந்தவகையில் செயற்படுத்தப்படும் “Dream Destination” வேலைத்திட்டத்தின் கீழ் நாரஹேன்பிட்டி புகையிரத நிலையத்தை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று (27) ஆரம்பிக்கப்பட்டது.

களனிவெளிப் பாதையின் மற்றுமொரு தனித்துவமான புகையிரத நிலையமாக கருதப்படும் நாரஹேன்பிட்டி புகையிரத நிலையம், கொடா வீதி புகையிரத நிலையத்திற்கும் கிருலப்பன புகையிரத நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ளது.

கொழும்பிலிருந்து 5.06 கி.மீ தூரத்திலும், கடல் மட்டத்திலிருந்து 3.72 மீ உயரத்திலும் அமைந்துள்ள இந்த புகையிரத நிலையம், இரண்டு பிரதான மேடைகளையும் ஒரு பயணச்சீட்டு கவுண்டரையும் கொண்டுள்ளது.

தொழில் திணைக்களம், போக்குவரத்துத் திணைக்களம், நில அளவைத் திணைக்களம் உள்ளிட்ட பல அரச, அரை – அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அருகில் அமைந்துள்ள இந்த புகையிரத நிலையத்தை, அன்றாட கடமைகளுக்காக வரும் ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

பயணிகளின் வசதிக்காக புகையிரத நிலையத்தில் புகையிரதப் பாதையின் குறுக்கே மேடைகளை இணைக்கும் வகையில் பயணிகள் மேம்பாலம் நிர்மாணித்தல், இரண்டாவது மேடையின் கூரை அமைத்தல், சுகாதார வசதிகளை மேம்படுத்தல், பயணிகளுக்கு வசதியாக இருக்கைகள் அமைத்தல் போன்ற நவீனமயமாக்கல் பணிகள் தனியார் துறையின் முழுமையான அணுசரனையுடனும் NIO Engineering இன் ஆதரவுடனும் செயல்படுத்தப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர, கொழும்பு பிரதி மேயர் ஹேமந்த வீரகோன் உள்ளிட்ட ஏனைய மக்கள் பிரதிநிதிகள், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சின் செயலாளர் கபில சி.கே. பெரேரா, புகையிரத பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரிய, NIO Engineering உறுப்பினர் பொறியியலாளர் ஸ்டென்லி மொரேமட, MAGA Engineering பிரதான நிறைவேற்று அதிகாரி பியதாச மதரசிங்க ஆகியோருடன் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சு மற்றும் Clean Sri Lanka வேலைத் திட்டத்தின் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related posts

இராஜாங்க அமைச்சர் அருந்திக்கவுக்கு கொரோனா

திஸ்ஸ அத்தநாயக்க MP பயணித்த ஜீப் விபத்து – மூவர் காயம்

சுகாதார வழிமுறைகள் மீறப்பட்டால் பெரும் சிக்கலாகும்