அரசியல்உள்நாடு

நாம் எதிர்கால சந்ததியினருக்கு சமாதானமான நாட்டையே வழங்க வேண்டும் – ஜனாதிபதி அநுர

“பெற்றோர்களே, இந்த தாய் நாட்டின் போரை முடிவுக்குக் கொண்டுவர உங்கள் பிள்ளைகள், மனைவிமார், உங்கள் கணவரைத் தியாகம் செய்தீர்கள்” நீங்கள் சிறந்த தாய்மார்கள். நீங்கள் சிறந்த மனைவிமார்.

ஆனால் அதன் இறுதி முடிவு என்னவாக இருக்க வேண்டும்? உங்கள் குழந்தை, உங்கள் கணவர், உங்கள் நண்பர், உங்கள் உறவினருக்கு நீங்கள் செய்யக்கூடிய மிக உயர்ந்த நீதி, இந்த நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதாகும்.

இந்த நினைவிடத்திற்கு முன், நாம் நின்று அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்துவது என்பது, மீண்டும் ஒரு மோதல் ஏற்பட இடமளிக்காமல், வெறுப்பு நிறைந்த சமூகத்திற்குப் பதிலாக சகோதரத்துவம், அன்புடன் கூடிய ஒற்றுமை நிறைந்த சமூகத்தை உருவாக்கத் தயார் என்ற உறுதிமொழியை எடுப்பதாகும்” என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

பத்தரமுல்ல, படைவீரர்கள் நினைவிடத்தில் இன்று (19) பிற்பகல் நடைபெற்ற 16 ஆவது படைவீரர்கள் தின நினைவு நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த தினத்தை நினைவுகூறும் நிகழ்வு இன்று (19) பிற்பகல் பத்தரமுல்ல, படைவீரர்கள் நினைவிடத்திற்கு முன்பாக, முப்படைகளின் தளபதி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.

ஜனாதிபதியின் முழுமையான உரை பின்வருமாறு:

எமது நாடு பல தசாப்தங்கள் யுத்தத்திற்கு முகங்கொடுத்தது. யுத்தம் எமது நாட்டுக்கும் மக்களுக்கும் பெரும் அழிவை தந்தது. பலவருடங்களின் பின்னர் யுத்தத்தை நிறைவு செய்ய முடிந்தது.

யுத்தத்தை நிறைவு செய்ய உயிர்த்தியாகம் செய்த படையினரை நாம் இன்று நினைவு கூறுகிறோம்.

இது முக்கியமான வரலாற்றுத் தினமாகும். இது யுத்த நிறைவு தினம் மட்டுமன்றி மீண்டும் நாட்டில் யுத்தம் ஏற்படுவதைத் தடுக்க சிங்கள, தமிழ், முஸ்லிம், பேர்கர், மலே, கிரிஸ்தவர் என சகல மக்களும் ஒரே நாட்டிற்குள் ஒற்றுமையாக நாட்டைக் கட்டியெழுப்பப் போராடுகின்றனர்.

யுத்தத்தை நிறைவு செய்ய எமது படையினர் உயிர்த்தியாகம் செய்தனர்.

இங்குள்ள நினைவுச் சின்னம் முழுவதும் அவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. யுத்தத்தினால் பலர் அங்கவீனமுற்றனர். பலர் தமது உடல் உறுப்புகளை இழந்தனர். அவர்களின் உறவினர்,

குடும்பத்தினர் பெரும் தியாகம் செய்தனர். அவர்களை நாம் தினமும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களுக்கு நாடு கடன் பட்டுள்ளது.

யுத்தம் என்பது பாரிய அழிவாகும். யுத்தத்தில் போராடிய நீங்கள் யுத்தம் எந்தளவு நாசகரமானது என்பதை அறிந்திருப்பீர்கள்.

யுத்தம் செய்த எவரும் யுத்தத்தை தொடர்ந்து எதிர்பார்த்து போராடவில்லை. அனைவரும் சமாதானத்தை எதிர்பார்த்தே போராடினர்.

வடக்கு தெற்கு பேதமின்றி பெற்றோரை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர். கணவரை இழந்த மனைவிமார் உள்ளனர். அவர்கள் கௌரவத்துடன் நினைவுத் தூபியில் தமது உறவினர்களின் பெயர்களைத் தேடுகின்றனர்.

இங்கு மாத்திரமா வடக்கிலும் இதே நிலைமை தான். தமது பிள்ளைகள், கணவர்மார்களின் புகைப்படத்தை வைத்துக் கொண்டு அவர்களின் உறவினர்கள் வீதியோரம் ஒப்பாரி வைக்கின்றனர்.

அனைத்து பெற்றோருக்கும் தமது பிள்ளை முக்கியம். பாரிய அழிவை சந்தித்த தாய்நாட்டில் அவ்வாறான யுத்தம் மீள ஏற்படுவதை தடுப்பது எமது பொறுப்பாகும்.எமது சந்ததி சண்டையிட்டது.

கோபமும் குரோதமும் பரவியது. ஆனால் எமது பிள்ளைகள் வாழும் இன்றைய சந்ததினருக்கு யுத்தம் செய்யாத,மோதல் அற்ற, கோபம், சந்தேகத்திற்குப் பதிலாக நட்புறவு மற்றும் அன்புள்ள நாடு உருவாக்கப்பட வேண்டும்.

கடந்த கால சம்பவங்களில் இருந்து பாடம் கற்க வேண்டும். மீள அவ்வாறான நிலை எமது தாய்நாட்டில் ஏற்பட இடமளிக்கக் கூடாது.

யுத்தமற்ற, குரோதமோ,சந்தேகமோ அற்ற நாடு உருவாக்கப்பட வேண்டும்.

மீண்டும் மோதல்,குரோதம் உள்ள நாட்டுக்குப் பதிலாக சமாதானமான நாட்டை உருவாக்குவதே அவர்களுக்கு நாம் செய்யும் கௌரவமாகும்.

நாம் எதிர்கால சந்ததியினருக்கு சமாதானமான நாட்டையே வழங்க வேண்டும். அதிகாரத்தை பெறவும் பாதுகாக்கவும் யுத்தம், மோதல் மற்றும் இனவாதத்தை கடந்த காலத்தில் பயன்படுத்தினார்கள்.

சரத் பொன்சேகா இரண்டரை வருடங்கள் சிறையில் இருந்தார். அவர் என்ன தவறு செய்தார். அவருடன் நான் அன்று நெருக்கமாக பழகினேன்.

அதிகாரத்தை பலப்படுத்தவும் பாதுகாக்கவும் மேற்கொள்ளப்பட்ட யுத்தங்கள் மற்றும் மோதல்களினால் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள பிள்ளைகளே பாதிக்கப்பட்டனர். யுத்தத்திற்கு எந்த காரணமும் அற்ற பங்களிக்காத கிராமத்துப் பெற்றோரின் பிள்ளைகளே இறந்தனர். அங்கவீனமுற்றனர். இது தான் அதனால் கிடைத்த அழிவாகும்.

மக்களால் புறக்கணிக்கப்பட்டோருக்கு யுத்தம் என்பது இனிய அனுபவம். நாம் சமாதானத்திற்காக ஒன்றிணைய வேண்டும். ஆனால் இன்று சமாதானம் என்பது காட்டிக்கொடுப்பின் சின்னமாக மாறியுள்ளது.

நல்லிணக்கம் என்பது காட்டிக்கொடுப்பாக உள்ளது. யுத்தம் ஒருபோதும் வெற்றியை கொண்டுதருவதில்ல. படைவீரர்களிடமிருக்கும் ஆயுதத்தை பயன்படுத்த தேவையற்ற அமைதியான சமூகம் உருவாக வேண்டும்.

நாம் மனிதாபிமானத்திற்கும் மனிதத்துவத்திற்குமே அடிபணிய வேண்டும். இந்த பூமி போதுமான அளவு இரத்தத்தில் தோய்ந்துள்ளது. பெற்றோரும் உறவினர்களும் அதிகமதிகம் கண்ணீர் சிந்தியுள்ளனர்.

யுத்தத்தின் வேதனையை அனுபவித்துள்ளோம். மீண்டும் அத்தகைய நிலை ஏற்படுவதை தடுக்க வேண்டும். அனைவரும் சமாதானத்திற்காகவே ஆயுதம் ஏந்தினார்கள்.

யுத்தத்தின் நிறைவு என்பது சமாதானத்தை நிலைநாட்டுவதாகும். நாம் முழுமையான வெற்றியாளர்களாக மாற சமாதானத்தை நிலைநாட்ட வேண்டும்.

நாம் சமாதானத்திற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தயார். நாட்டின் சமாதானத்திற்காகவே படைவீரர்கள் பங்களித்தார்கள். எதிர்காலத்திலும் சமாதானத்திற்காக பங்களிப்பார்கள்.

சமாதானத்தை நிலைநாட்டுவதே இறந்த படைவீரர்களுக்கு செய்யும் கைங்கரியமாகும். இது கடினமான செயற்பாடு. வடக்கிலும் தெற்கிலும் அதிகாரத்திற்காக இனவாதம் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. தாய்நாட்டில் உண்மையான சமாதானம் நிலைநாட்டப்படவில்லை.

மண்சரிவு அபாயம் உள்ள 4900 வீடுகள் உள்ளன. மழை பெய்யும் போது அதில் எங்கு மண்சரிவு ஏற்படும் என்ற அச்சம் ஏற்படுகிறது. உலகில் எங்காவது மோதல் நடக்கும் போது எமது பொருளாதாரத்திற்கு எத்தகைய தாக்கம் ஏற்படும் என்ற அச்சம் தோன்றும்.

இத்தகைய நிலையில் இது சுதந்திரமான நாடா? பொருளாதார ரீதியாக வீழ்ந்த நாட்டில் எங்கு இறையாண்மை உள்ளது. பலமான பொருளாதாரமற்ற நாடாக இருக்கிறோம். உலகில் கௌரமான நாடாக உயர பொருளாதார ஸ்தீர நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்.

குற்றங்கள்,தொற்றுநோய்கள் அற்ற நாடு உருவாக வேண்டும். மோதல்களற்ற குரோதமற்ற நாடு உருவாக வேண்டும். அதன் ஊடாகவே பலமான இறையாண்மை ஏற்படும்.

இந்த தாய் நாட்டை நாம் நேசிக்கிறோம். உலகில் சிறந்த நாடாக மாற்ற சமாதானமும் நல்லிணக்கமும் அவசியம். அதற்கான அனைத்து முடிவுகளையும் தைரியமாக எடுக்க வேண்டும்.

படையினர் காட்டிய அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் தைரியம் என்பன இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதில் எங்களுக்கு நம்பிக்கையைத் தரும். அதற்காக நாம் அனைவரும் சேர்ந்து ஒரு புதிய போராட்டத்தை ஆரம்பிப்போம்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

ட்ரம்பின் வரிக் கொள்கை தொடர்பில் அரசாங்கத்திடம் இன்னும் தெளிவான திட்டமொன்று இல்லை – சஜித் பிரேமதாச

editor

மாணவர்களை அழைத்து வர அவுஸ்திரேலியா நோக்கி விஷேட விமானம்