இன்று, நாட்டு மக்கள் எதிர்பார்த்த புதிய இலங்கை கட்டியெழுப்பப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உள்ளூராட்சி மன்றங்கள், தெளிவான பாராளுமன்ற பெரும்பான்மை மற்றும் ஜனாதிபதி பதவியின் அதிகாரத்தைக் கொண்ட தற்போதைய அரசாங்கம், தான் அளித்த வாக்குறுதிகள், தருவதாகச் சொன்ன சலுகைகள், உறுதியளித்த சேவைகளை நிறைவேற்றியபாடில்லை.
அபிவிருத்தியால் மிளிரச் செய்வோம் என்று அளித்த வாக்குறுதிகள் இன்று நிறைவேற்றப்படவில்லை.
இன்று நாட்டில் அபிவிருத்தி ஏற்படுவதற்குப் பதிலாக, இன்று நாட்டில் பாதாள உலகக் கலாச்சாரமே உருவாகி வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்திக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளும் முகமாக மத்திய கொழும்பு தேர்தல் தொகுதியின் கிழக்கு மாளிகாவத்தை மற்றும் கெத்தாராம வட்டாரங்களை சேர்ந்த மக்களின் பங்கேற்புடனான மக்கள் சந்திப்பொன்று நேற்று (31) மாலை இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இந்த மக்கள் சந்திப்பை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற கொழும்பு மாவட்ட உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.
இப்பிரதேசங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்போது, அவர்கள் வீடு திரும்புவார்களா இல்லையா என்பதில் அவர்களுக்கு நம்பிக்கையில்லா நிலை காணப்படுகின்றன.
துப்பாக்கிச் சூடு நடத்தப்படுமா அல்லது கொலை நடக்குமா என்பது குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இந்நாட்டு மக்கள் இன்று சமூகப் பாதுகாப்பைக் கூட இழந்துவிட்டனர். தேசிய பாதுகாப்பு இருப்பதாக தெரியவில்லை.
இந்த அரசாங்கத்தின் திறமையின்மையால், சட்டம் ஒழுங்கு குண்டர்கள் மற்றும் பாதாள உலகக் கும்பல்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
இதனால் முழு நாட்டிலும் அச்சமும் சந்தேகமும் நிலவுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஜனநாயகம் சீர்குலைக்கப்பட்டு, ஒரு கட்சி ஆட்சிக்கு முறையை நோக்கி நாட்டை கொண்டு சென்று கொண்டிருக்கின்றனர்.
மக்கள் பிரதிநிதிகள் தமது சேவைகளை மேற்கொள்வதற்கான சரியான சூழல் நிலவியபாடில்லை.
உள்ளூராட்சி மன்றத் தவிசாளர்கள் கொல்லப்படுவதும், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதும், ஜனநாயகம் அழிக்கப்பட்டு வரும் சூழ்நிலைக்கு மத்தியில் பாதாள உலகம் சமூகத்தைக் கட்டுப்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
பாதாள உலகம் சமூகத்தைக் கட்டுப்படுத்தும்போது, ஜனநாயகம் அழிக்கப்படுகின்றது.
இதன் பலன், ஜனநாயகத்தை நிராகரித்து, நாட்டில் ஒரு கட்சி ஆட்சியை ஸ்தாபிக்க முயற்சிக்கும் தற்போதைய அரசாங்கத்திற்குச் செல்கின்றன. நாட்டின் சட்டத்திற்கு பதிலாக காட்டுச் சட்டம் மேலோங்கி காணப்படுகின்றன.
நாட்டில் உள்ள அனைத்து சமூக அமைப்புகளும் அரசியல்மயமாக்கப்பட்டுள்ளன. நீதி மற்றும் நியாயம் நிலைநாட்டப்படாது, முழு சிவில் சமூகத்தையும் தனது கைகளில் எடுத்துக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறு எல்லா அதிகாரங்களையும் தமது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டும், இந்த அரசாங்கத்தால் நாட்டின் கொலைக் கலாச்சாரத்தை நிறுத்திக் கொள்ள முடியாது போயுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
இந்த பாதாள உலக கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
அரசாங்கம் கூறும் விதமாக பாதாள உலகத்தை முற்றாக துடைத்தெறிந்தால், அதனைச் செய்தால் நல்லது.
போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கைகளைச் செய்வதோடு, துப்பாக்கிச் சூடுகளும் கொலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
அச்சமின்றி மக்களுக்கு சேவை செய்ய மக்கள் பிரதிநிதிகளுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். இந்த அரசாங்கத்தால் அதைச் செய்ய முடியாது போயுள்ளது. வீராப்பு பேசிக் கொண்டிருந்தாலும், இந்த அரசாங்கத்தால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியவில்லை.
நாட்டில் மூன்று தேர்தல்கள் நடத்தப்பட்டு மக்கள் அதிகாரத்தை இந்த அரசாங்கத்திற்கு பெற்றுத் தந்துள்ளனர், அவ்வாறு இருக்கையில் வேறு எந்த தரப்பினருக்கும் இந்த அதிகாரத்தை வழங்க முடியாது.
ஜனாதிபதி, பிரதமர், மேயர், தவிசாளர், அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் ஜே.வி.பி.யைச் சேர்ந்தவர்கள்களாக காணப்படுகின்றனர்.
எதிர்க்கட்சியைத் தவிர வேறு எந்தக் குழுவிற்கும் பொறுப்புகளை ஒதுக்க முடியாது. அரசாங்கத்தின் திறமையின்மையை மறைக்க முயற்சிக்கிறார்கள்.
அரசாங்கம் தான் சொல்வதைச் செய்ய முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் நேரத்தில், மக்கள் மத்தியில் வேறு கதைகளை உருவாக்கி வருகின்றனர்.
எனவே, பொய் சொல்லாமல் அரசாங்கம் தனது கடமையை நிறைவேற்ற வேண்டும். அதனை செயலில் செய்ய வேண்டும். அதற்கான பணிகளை, ஏற்பாடுகளை முன்னெடுங்கள்.
மக்கள் பிரதிநிதிகளுக்கு உடனடியாக பாதுகாப்பைப் பெற்றுக் கொடுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
